அரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார் ஜோன் அமரதுங்க

ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லையென்றால் அரசியலிலிருந்து ஓய்வுபெற முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தயாராகி வருகின்றார்.
தேர்தலில் தோல்வியடைந்தவர்களைத் தேசியப் பட்டியல் ஊடாக நியமிப்பதில்லையென்பது ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயம் என்பதை ஜோன் அமரதுங்க, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவூட்டியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் ஜோன் அமரதுங்கவின் பெயரே முதலில் இடம்பெற்றுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே கிடைத்தது.
பொதுத் தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவைப் போல் ஜோன் அமரதுங்கவும் கடந்த 1977ஆம் ஆண்டு முதலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன் 43 ஆண்டுகள் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.