நாடாளுமன்றில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீடு செல்வதற்காக வரவில்லை – அர்ச்சுனா எம்.பி குமுறல்.

நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவர் நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருக்கும் நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சபாநாயகரின் அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்ற போதும், எதிர்க்கட்சித் தலைவர் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என அர்ச்சுனா குற்றம் சுமத்தினார்.

தாம் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து நாடாளுமன்றில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீடு செல்வதற்காக வரவில்லை என்றும், உரையாற்றச் சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் நாடாளுமன்றம் வந்து பயனற்ற நிலைமை இருப்பதாகவும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க, இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் உள்ளிட்ட தரப்பு கலந்துரையாடி இருப்பதாகவும், இந்த விடயத்தில் சபாநாயகரின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.