அநுரவின் ‘Clean Sri Lanka’ மற்றும் லீ குவான் யூவின் ‘Keep Singapore Clean’ என்பதற்கும் ஒற்றுமைகள் உள்ளதா?
லீ குவான் யூ சுதந்திர சிங்கப்பூரின் நிறுவனராகக் கருதப்படுகிறார்.
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட தூய்மையான இலங்கை திட்டம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வளமான நாடு, அழகான வாழ்வு என்ற தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க வேலைத்திட்டத்தின்படி நாட்டின் சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துவதோடு, வளர்ந்த நாடுகளின் மக்கள் அனுபவிக்கும் உயர் சமூகப் பொருளாதார நிலை மற்றும் சுதந்திரத்தை மரபுரிமையாகப் பெறும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும், இது செயல்படுத்தப்பட்ட சிங்கப்பூரை தூய்மையாக வைத்திருங்கள் திட்டத்தை பின்பற்றுகிறதா என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
இரண்டு திட்டங்களையும் படிக்கும் போது, அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
‘Keep Singapore Clean’ (சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருத்தல்) எப்படி தொடங்கியது?
சிங்கப்பூர் சுதந்திர நாடாக சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட முதல் தேசிய பிரச்சாரம் ‘சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருங்கள்’ திட்டம்.
சுதந்திர சிங்கப்பூரின் முதல் பிரதமர் , லீ குவான் யூ தலைமையில் 01 அக்டோபர் 1968 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், கண்மூடித்தனமான கழிவுகளை அகற்றுவது போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் சிங்கப்பூரை பிராந்தியத்தின் தூய்மையான மற்றும் பசுமையான நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
1819 முதல் இரண்டாம் உலகப் போர் வரை பிரிட்டிஷ் காலனியாக இருந்த சிங்கப்பூர், 1942 முதல் 1945 வரை மூன்று ஆண்டுகள் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது.
அதிக சதவீத மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் அதிகரித்த வேலையின்மை ஆகியவை அந்த நேரத்தில் சிங்கப்பூர் எதிர்கொண்ட அன்றைய முக்கிய பிரச்சனைகளாகின.
சிங்கப்பூரில் 1968 ஆம் ஆண்டுக்கு முன் இந்த நிலைமைகளின் கீழ் ‘Keep Singapore Clean’ போன்ற பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.
1968 இல், ‘Keep Singapore Clean’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது, 1969 இல், சிங்கப்பூர் நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
லீ குவான் யூ மற்றும் ‘Keep Singapore Clean’
லீ குவான் யூ சுதந்திர சிங்கப்பூரின் நிறுவனராகக் கருதப்படுகிறார்.
1959 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, லீ குவான் யூ 31 ஆண்டுகள் சிங்கப்பூரை பிரதமராக ஆட்சி செய்தார்.
அவர் சிங்கப்பூரை ஆசியாவின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக மாற்றினாலும், அரசியல் மற்றும் சமூக சுதந்திரம் இல்லாததால் மனித உரிமைக் குழுக்களால் விமர்சிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 1968 இல், சிங்கப்பூர் அரசாங்கத்தால் ‘சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருங்கள்’ ‘Keep Singapore Clean’ திட்டத்தை செயல்படுத்த ஒரு தேசிய குழு அறிவிக்கப்பட்டது.
அதில் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சு, கலாச்சார அமைச்சு, பொதுப்பணித் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்குவர்.
1968 அக்டோபர் 1, 1968 அன்று சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் 1,500க்கும் மேற்பட்ட சமூகத் தலைவர்களின் பங்கேற்புடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
பொது சுகாதார சட்டங்களை மாற்றுதல், தெருவோர வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளை மையங்களுக்கு நகர்த்துதல், முறையான கழிவுநீர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.
இந்தத் திட்டம் குறித்த தகவல்கள் சிங்கப்பூரின் 4 முக்கிய மொழிகளில் (ஆங்கிலம் – மென்டரின் (சீன மொழிகளில் ஒன்று) – மலாய் – தமிழ்) , பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு, அதிகாரிகளால் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
சமூக நடத்தையை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் முதல் முறையாக அபராதம் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திட்டத்திலதான்.
இத்திட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
திட்டத்தின் சிறப்பம்சங்களாக தெரிந்தவை
‘Keep Singapore Clean’ என்ற தேசிய பிரச்சாரம் தொடங்கி கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் ஆகிறது.
இதற்கிடையில், சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது மற்றும் மிகப்பெரிய சேவைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் நிறுவனர், சிங்கப்பூர் பிதா , முன்னாள் பிரதமர் லீ குவான் யூவும் 2015ல் காலமானார்.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் இவையே.
* 1965 – சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது
* 1968 – சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருத்தல் தொடங்கப்பட்டது
* 1971 – ஆண்டு மரம் நடும் நாள் தொடக்கியது
* 1973 – Keep Our Water Clean திட்டத்தின் ஆரம்பமாகியது.
* 1977 – சிங்கப்பூர் நீர்நிலைகளை சுத்தம் செய்தல் ஆரம்பமாகியது.
* 1983 – Keep the Toilet Clean திட்டம் ஆரம்பமானது.
* 1992 – சூயிங்கம் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை போடப்பட்டது.
இந்தத் திட்டத்துடன், பொதுப் பூங்காக்களை சுத்தம் செய்தல், பஸ்கள் மற்றும் பேருந்து நிலையங்களை சுத்தம் செய்தல், தொழிற்சாலைகளை தூய்மையாகப் பராமரித்தல் ஆகியவையும் பின்னர் மேற்கொள்ளப்பட்டன.
Keep Singapore Clean மற்றும் ‘Clean Sri Lanka’ திட்டங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன?
தூய்மையான ஸ்ரீலங்கா திட்டம், சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை இலக்காகக் கொண்ட ஒரு தேசிய பணியை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘கிளீன் ஸ்ரீலங்கா’, ‘கீப் சிங்கப்பூர் கிளீன்’ ஆகிய இரண்டு திட்டங்களிலும் ‘சுத்தம்’ என்ற வார்த்தையே முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
இந்த இரண்டு திட்டங்களும் தூய்மையை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தூய்மை இலங்கை திட்டத்திற்கு இணையாக பல்வேறு துப்புரவு வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
“எங்கள் முக்கிய பணி தூய்மையான இலங்கைத் திட்டம். இது சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. அனைத்துத் துறைகளிலும் நசுக்கப்பட்ட மற்றும் சிதைந்த சமூக அமைப்பையும், இந்த ஆதரவற்ற தாய்நாட்டையும் மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்தம் மற்றும் துப்புரவுப் பணியாகும். தூய்மையான இலங்கை திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.
1968 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி ‘சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருங்கள்’ ஆரம்பிக்கப்பட்டதைப் போன்று, சமூகத் தலைவர்கள், தன்னார்வத் தலைவர்கள் மற்றும் ஏனையோரின் பங்களிப்புடன் ‘தூய்மையான இலங்கை’ திட்டம் ஜனவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
சிங்கப்பூர் திட்டத்தில் செய்தது போல் இலங்கை திட்டத்திலும் ஒரு வழிநடத்தல் குழு பெயரிடப்பட்டுள்ளது.
வீதியோர வியாபாரிகளை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், வீதியோர வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இது சிங்கப்பூர் தூய்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது.
1988ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பஸ்களை சுத்தமாகவும் தரப்படுத்தவும் செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், கடந்த ஜனவரி 02ஆம் திகதி முதல் இலங்கையிலும் அதேபோல , பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விசேட போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து இலங்கை திட்டம் கொப்பியடிக்கப்பட்டதா?
இலங்கையின் அரசியலில் சிங்கப்பூர் பற்றிய நிலை, கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரின் லீ குவான் யூ போன்ற தலைவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துடன் அதுவும் ஒன்றாக அமைந்திருந்தது.
ஏறக்குறைய அனைத்து காலங்களிலும், இலங்கையை அபிவிருத்தி செய்வதற்காக அரசியல்வாதிகளின் வாக்குறுதியூக இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவதாகவே இருந்தது.
1968ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கும் தற்போது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அது எவ்வாறு செயற்படப் போகின்றது என்பது பற்றி மேலும் ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளது.