அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்து – 3 பேரின் உடல்கள் கண்டெடுப்பு!
அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உம்ரங்சோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று (ஜன. 7) 15 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சுரங்கத்தின் உள்ளே திடீரென நீர் புகுந்ததால் தொழிலாளர்களில் 9 பேர் உள்ளே சிக்கியதாகக் கூறப்படுகிறது.
சிக்கியவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் சரியாகத் தெரியவில்லை என குவாரி தொழிலாளர்கள் கூறிய நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் 9 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியதாக அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், மாநிலத்தின் மீட்புப் படையினரும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள அசாம் முதல்வர், “சுரங்கத்தின் உள்ளே 100 அடிக்கு நீர் அளவு உயர்ந்துள்ளது. விசாகப்பட்டிணத்தில் இருந்து ஆழ்துளையில் மூழ்கி தேடுவதற்கு பயிற்சி பெற்ற டைவர்கள் வரவழைக்கப்பட உள்ளனர்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவக் குழுவினர், பொறியாளர்கள் குழு, அசாம் ரைஃபிள்ஸ், ராணுவப் படையினர் முதற்கொண்டு அனைவரும் மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாவட்டங்களில் சுரங்கப் பணிகளில் தொழிலாளர்கள் சிக்கி பலியாவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்தாண்டு ஜனவரி மாதம், நாகாலாந்தில் உள்ள வோகா மாவட்டத்தில் சுரங்கத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். அடுத்ததாக, மே மாதத்தில் அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் 3 பேரும், செப்டம்பரில் 3 பேரும் பலியாகினர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிச. 13 அன்று மேகாலயாவில் நடந்த விபத்தில் சுரங்கத்தில் சிக்கி அதிகபட்சமாக 15 தொழிலாளர்கள் பலியாகினர்.