கல்கீசையில் நடந்த இரண்டு கொலைகளும் அசங்க மற்றும் கொஸ்மல்லி இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகும்…

தற்போது டுபாயில் தலைமறைவாகி இந்த நாட்டில் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் பிரபல குற்றவாளிகளான படோவிட்ட அசங்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் நீட்சியாக இன்று அதிகாலை இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று(07) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட 36 வயதான மனோ நேமட்டத்த என்ற 36 வயதான சுதத் கோமஸ் மற்றும் 21 வயதான சானக விமுக்தி ஆகியோர் படோவிட்ட அசங்கவின் நெருங்கிய நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குறித்த நபரின் பாட்டி மற்றும் சகோதரனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு கொஸ்மல்லியின் கும்பல் படோவி மீது அத்துமீறி தாக்குதல் நடத்த செய்த இரண்டு கொலைகள் என புலனாய்வு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இன்று அதிகாலை 4.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகள் இருவர் 9mm ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு இந்த இரண்டு கொலைகளையும் செய்துவிட்டு தப்பியோடியது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது.
36 வயதான சுதத் கோமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் , 21 வயதான சானக விமுக்தி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் விசாரணை இன்று காலை கல்கீசை நீதவான் சதுரிகா சில்வாவினால் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேல்மாகாண தெற்கு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
புத்தாண்டின் கடந்த 7 நாட்களில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். வெலிகம 4ஆம் திகதி கப்பரதொட்ட வள்ளிவல பிரதேசத்தில் முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவிடம் இந்த நிலைமை குறித்து வினவினார்கள். இந்த குற்றச் செயல்களின் தொடர்ச்சி குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அப்போது, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கூறியதாவது:
“என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. இந்த பாதாள உலக விவகாரங்கள் மட்டுமல்ல. போதைப்பொருள் கடத்தலில் கருப்புப் பணமும் அடங்கும். இது ஒரு நெட்வொர்க். இதற்கான பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். புலனாய்வு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் அறிவுறுத்தல் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு கிடைத்துள்ளது. நீங்கள் முடிவுகளை விரைவில் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். “” என்றார்.