கனடிய பிரதமர் ட்ரூடோ பதவி விலக காரணம்?
கனடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) கிட்டத்தட்ட பத்தாண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
ஆனால் கடந்த சில மாதங்களாகப் பதவியிலிருந்து விலகும்படி அவருக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. ஏன் அந்த நெருக்கடி? ஒரு காலத்தில் உலக அளவில் முற்போக்கு அரசியலுக்காகப் புகழ் பெற்றிருந்தார் ட்ரூடோ. ஆனால் கடந்த ஆண்டு அவருக்கான ஆதரவு 33 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
அவருடைய ஆட்சியின் கீழ் பொருளாதார வளர்ச்சி இல்லாதது குறித்துப் பலரும் குறைகூறினர். பணவீக்கம், உயரும் உணவு விலை, உயரும் வீட்டு விலை… இந்தக் காரணங்களால் பொதுமக்கள் அரசாங்கத்திடம் கொண்டிருந்த வெறுப்பு அதிகமானது.
அரசியல் ரீதியிலான சர்ச்சைகளிலும் ட்ரூடோ சிக்கினார். 2017ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் பயணச் சேவைகளை அன்பளிப்பாய் ஏற்றுக்கொண்டதற்குத் ட்ரூடோ கண்டனத்துக்கு ஆளானார்.
ட்ரூடோ ஏன் பதவி விலகினார்? கடந்த சில மாதங்களாகவே ட்ரூடோவின் மிதவாதக் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் பொறுப்பிற்கு புதிதாக யாரையாவது கொண்டுவரும் சாத்தியத்தைப் பரிசீலனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு (2024) திரு ட்ரூடோ பதவி விலகவேண்டும் என்று 20க்கும் அதிகமான மிதவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
சென்ற மாதம் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திருமதி கிரிஸ்டியா ஃப்ரீலண்ட் (Chrystia Freeland) பதவி விலகினார். அவர் ட்ரூடோவைப் பற்றி வெளிப்படையாகக் குறைகூறினார். டோனல்ட் டிரம்ப் இரண்டாம் தவணையாக அதிபர் பொறுப்பேற்கும்போது ட்ரூடோவால் சமாளிக்க முடியுமா என்று அவர் வினவினார்.
அடுத்து என்ன?
ஆளும் மிதவாதக் கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை பதவியில் நீடிக்கவிருப்பதாகத் ட்ரூடோ சொன்னார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கும்படி கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்டுக்கொண்டதாய் அவர் தெரிவித்தார். மார்ச் 24ஆம் தேதி வரை நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தற்காலிகமாய் நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார். தேர்தலை எப்போது எதிர்பார்க்கலாம்?
இவ்வாண்டு (2025) அக்டோபர் மாதத்திற்குள் கனடாவில் தேர்தல் நடந்தாக வேண்டும். ஆளும் மிதவாதக் கட்சி மீது நம்பிக்கை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனவே விரைவில் தேர்தல் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சி தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சி தேர்ந்தெடுக்கும் புதிய தலைவரைப் பொறுத்து அது மாறலாம்.