ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு அனுப்ப வேண்டாம்.- ஜனாதிபதிக்கு பதியுதீன் கடிதம்!

முல்லைத்தீவு கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நேற்று (7) எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளார்.
மியன்மாரில் யுத்த மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், நிராயுதபாணியாக வந்த இவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கி வருகின்ற போதிலும், அவர்களை திருப்பி அனுப்புவது தார்மீக நடவடிக்கையல்ல என ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு , இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அகதிகளாகச் சென்ற பெருந்தொகையான மக்களுக்கு உலக நாடுகள் மனிதாபிமானப் பண்புகளின் அடிப்படையில் உதவி செய்தமையால், இலங்கையும் மனிதாபிமானப் பண்புகளை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை கூட மியன்மார் மக்கள் எதிர்கொள்ளும் நிலைமையை தெளிவாக அங்கீகரித்துள்ளதுடன், அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாகவும், எனவே இந்த நேரத்தில் இலங்கையும் ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவ வேண்டும் எனவும் ரிஷாட் வலியுறுத்தியுள்ளார்.
அகதிகள் தொடர்பான சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு இணங்குவதையும் இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும், அகதிகளின் உயிருக்கோ சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.