இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்திடம் படுதோல்வியை தழுவிய இலங்கை அணி.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இது டி20 தொடரில் நியூசிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறிக்கிட்டதால் ஆட்டம் 37 ஓவராக குறைக்கப்பட்டது.
முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கம் வீரர் வில் யங் 16 ரன்களின் ஆட்டம் இழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்தரா மற்றும் மார்க் சாப்மேன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது. ரச்சின் ரவீந்திர 79 ரன்களில் ஆட்டமிழக்க, மார்க் சாப்மேன் 62 ரன்களில் வெளியேறினார்.
டேரல் மிட்செல் 38 ரன்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து அணி பெரிய இலக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீக்ஷனா தன்னுடைய அபார பந்துவீச்சால் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். 34.5 வது ஓவரில் மிட்செல் சாட்னர் விக்கெட்டையும், 34.6 வது ஓவரில் நாதன் ஸ்மித் விக்கெட்டும் வீழ்த்திய தீக்சனா 36.1 வது ஓவரில் மாட் ஹென்றி விக்கெட்டை எடுத்தார்.
இதன் மூலம் அவர் ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். இதனால் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. இதில் இலங்கை அணியின் முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
நிஷாங்கா 1 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 10 ரன்களிலும் குஷல் மெண்டிஸ் இரண்டு ரன்களிலும் கேப்டன் அசலங்கா நான்கு ரன்களிலும் ஆட்டமிழக்க ஒரு பக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுபக்கம் அபாரமாக விளையாடிய கமிண்டூ மெண்டிஸ் 64 ரன்கள் சேர்த்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி 30.2 ஓவர்கள் எல்லாம் 142 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.