அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின.

அமெரிக்காவின் ​லொஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட 30, ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இக்காட்டுத் தீயின் காரணமாக, சான்டா மோனிகா மற்றும் மாலிபு இடையேயான பசிபிக் பொலிசேட்ஸ் பகுதியில் சுமார் 1,262 ஏக்கர் பரப்பு எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரண்ட காலநிலை நீட்சியினால் உண்டாகும் காற்று காரணமாக பெரும் தீ ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஒரு சில மணிநேரத்தில் தீ வேகமாக பரவியதால், ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். டோபாங்கா கனியான் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறும்போது, ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. தீ அங்கிருந்து பசிபிக் கடல் வரை பரவியுள்ளதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு விமானங்களில் உள்ள வீரர்கள் கடலில் இருந்து தண்ணீரை எடுத்து பற்றி எரியும் வீடுகள் மீது பாய்ச்சி வருகின்றனர். தீ சுவாலைகளால் வீடுகள் எரித்து நாசமாகியுள்ளன.

கைவிடப்பட்ட வாகனங்கள் புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டன. இதனால் அவசர கால வாகனங்கள் கடந்து செல்ல முடிந்தது.

பள்ளத்தாக்கிலிருந்து கடற்கரைக்கு செல்ல ஒரு வீதி மட்டுமே இருப்பதாலும், ஒரே ஒரு கடற்கரை நெடுஞ்சாலை மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாலும் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் மக்கள் நடை பயணமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இக்காட்டுத்தீ ஆரம்பமாவதற்கு முன்பு, தேசிய வானிலை சேவை நிலையம், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தீவிர தீ பரவும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. காற்று மணிக்கு 50 முதல் 80 கி.மீ வேகத்திலும், மலை, மலையடிவார பகுதிகளில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.