பெரியார் பற்றி அவதூறாகப் பேசிய சீமான் வீட்டை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது!
பெரியார் பற்றி அவதூறாகப் பேசிய நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் விழா ஒன்றில் கலந்துகொள்ள சீமான் செல்லவிருந்த நிலையில், அவரை எங்கும் செல்லாமல் தடுக்கும்விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது சாலை சந்திப்பிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது சீமான் வீட்டின் முன்பு நின்ற கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியை கல் எறிந்து உடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மீண்டும் பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பேசியுள்ளதால் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.