யாழில் பல இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் அறுக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில்; இந்திய இழுவைப் படகுகள் ஈடுபட்டதால் சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன.
இதனால் அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின.
எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் கருத்து தெரிவிக்கையில்,
நேற்றிரவு 10 மணியளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன.
தற்போது மீன்பிடி பருவ காலம். இந்திய இழுவைப் படகுகளின் இதுபோன்ற செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் மீனவர்களின் இழப்பீட்டை வழங்கி,; மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என பாதிக்கப்ட்ட மீனவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.