பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடம்
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியலை 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ), உலக வங்கி, குற்ற பதிவுகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவு ஆதாரங்களை ஒருங்கிணைத்து இந்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இத்துடன் அவதார் சார்பில் நாடு முழுவதும் 60 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,672 பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, குருகிராம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் டாப் 10-ல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இதுகுறித்து அவதார் குழும நிறுவனர்-தலைவர் சவுந்தர்யா ராஜேஷ் கூறும்போது, “இந்தியாவில் பணிபுரியும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். நகரங்கள் உண்மையிலேயே பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் இருப்பதுடன், பெண்களின் பலத்தை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலையை வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
பெண்களுக்கு பாதுகாப்பான தெருக்கள், சுகாதாரம் மற்றும் கல்வி வசதி, மலிவான வாழ்க்கை ஆகியவற்றை நகரங்கள் வழங்க வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல், பெண்களின் பொருளாதார வெற்றிக்கான போட்டி வழிகள் மற்றும் வணிகத் தலைவர்களாக அவர்கள் செழிப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்குவதாக நகரங்கள் இருக்க வேண்டும்” என்றார்.