மன்னார் சதொச மற்றும் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று.

மன்னார் சதொச மனிதப்  புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் (9.01) வியாழக்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதலில் மன்னார் சதொச  மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராஜ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதணி சிவலிங்கம் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.

மேலும் யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன் , மன்னார் பொலிஸார் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.

இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

“ ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

76 இலக்கம் தொடக்கம் 156 வரையிலான 80 பெட்டிகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் மேலதிக பகுப்பாய்விற்கு மன்னார் நீதவான் நீதி மன்றத்தினால்   கையளிக்கப்பட்டது.

மிகுதி 75 எலும்புக்கூட்டு பெட்டிகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (10) கையளிக்கப்பட உள்ளது. இவற்றைப் பகுப்பாய்வு செய்து மேலதிக அறிக்கைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

கையளிக்கப்பட்டுள்ள ‘சதொச’ மனிதப் புதைகுழி எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் இறப்புக்கான காரணம்,வயது,பால் நிலை போன்ற விடயங்களையும் இறப்பு ஏற்பட்டமைக்கான காரணங்களும் மன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் சில தினங்களில் மன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை(10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை இடம்பெற்றது.இதன்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அவர்களினால் ஏற்கனவே பகுப்பாய்வு செய்யப்பட்ட 81 மனித எச்சங்களில் 27 மனித எச்சங்களுக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம்,வயது,பால் நிலை போன்ற காரணங்கள் குறித்த 27 மனித உடலங்களுக்கான அறிக்கைகள் மன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

மிகுதி மனித எச்சங்களுக்கான அறிக்கை 6 மாத காலத்தில் மன்றில் கையளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.