மோட்டார்சைக்கிள் மோதியதில் மூன்று சக்கர சைக்கிளில் பயணித்த மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலே பலி.

மூன்று சக்கர சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் . தனது இயலாத நிலையிலும் பிறரிடம் கையேந்தாது சிறு தொழிலை செய்து உழைத்து வாழ்ந்த இவரது இழப்பு அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இச் சம்பவம் பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (9) காலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது .
விபத்தில் பலியானவர் கோமாரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மென்டிஸ் அப்பு விஜயஸ்ரீ ( வயது 71 ) என்பவராவார்.
பல வருடங்களாக அவர் பிரதான வீதியில் கோமாரி மகா வித்தியாலயத்திற்கும் தபாலகத்திற்கும் இடையே உள்ள மரத்தின் கீழ் மூன்று சக்கரச் சைக்கிளில் நிற்பது வழக்கம். செருப்பு தைப்பதும் குடை திருத்துவதும் தொழிலாக கொண்டிருந்தவர்.
இரண்டு கால்களும் இயலாத மாற்றுத் திறனாளியான அவர் மூன்று சக்கர சைக்கிளில் வீட்டிலிருந்து வந்து பிரதான வீதியில் கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு செல்கின்ற பொழுது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதியது . அக் கணத்தில் அவர் தூக்கி எறியப்பட்டார். அந்த இடத்திலேயே அவர் மரணமானார்.