கனடியப் பிரதமரின் முற்போக்குக் கட்சி மார்ச் 9ல் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது!
கனடியப் பிரதமர் பதவியிலிருந்து விலகவிருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவின் முற்போக்குக் கட்சி எதிர்வரும் 2025ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு மார்ச் 9ஆம் தேதி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கப்போவதாகக் கூறியிருக்கிறது.
எதிர்வரும் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளில் முற்போக்குக் கட்சி வலுவிழந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒன்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபிறகு, வரும் மாதங்களில் பதவி விலகப்போவதாகப் பிரதமர் ட்ரூடோ ஜனவரி 6ஆம் தேதி அறிவித்தார். கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை தாம் பிரதமராகவும் முற்போக்குக் கட்சித் தலைவராகவும் செயல்படப்போவதாக ட்ரூடோ கூறினார்.
“தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் தீவிரமான, பாதுகாப்பான செயல்முறைக்குப் பிறகு, கனடிய முற்போக்குக் கட்சி மார்ச் 9ஆம் தேதி புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து, போராடி, 2025ஆம் ஆண்டு தேர்தலை வெல்லும்,” என்று அக்கட்சி அறிக்கை ஒன்றில் கூறியது.
எதிர்வரும் தலைமைத்துவப் போட்டியின் முதற்கட்ட விதிமுறைகளைக் கோடிட்டு அவற்றைப் பற்றிக் கலந்துபேச, கட்சியின் தேசிய இயக்குநர்கள் வாரியம் வியாழக்கிழமை (ஜனவரி 9) அதிகாரபூர்வமாகச் சந்தித்தது.
தலைமைத்துவ வாக்கெடுப்பு மார்ச் 9ஆம் தேதி நிறைவடையும் என்றும் அதே தேதியன்று புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் கட்சி தெரிவித்தது. தலைமைத்துவப் போட்டியில் வாக்களிக்கத் தகுதிபெறுவதற்கு முற்போக்குக் கட்சி உறுப்பினராகப் பதிவுசெய்ய ஜனவரி 27ஆம் தேதி கடைசி நாள் என்றும் கட்சி கூறியது.
தலைமைத்துவப் போட்டியில் சேர்ந்துகொள்ள, வேட்பாளருக்கான நுழைவுக் கட்டணம் C$350,000 ஆகும்.
இதற்கிடையே, முற்போக்குக் கட்சியின் தலைமைத்துவத்தில் முன்னாள் நிதி அமைச்சர் கிறிஸ்டிய ஃபிரீலேண்டும், முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னியும் விருப்பம் தெரிவித்துள்ளதாக ‘த குளோப் அண்ட் மேய்ல்’ நாளேடு கூறியுள்ளது.