இலங்கை அணி நியூசிலாந்தை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்றது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் மூன்றாவது போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி நியூசிலாந்தை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா 42 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். குசால் மென்டிஸ் 48 பந்துகளில் 54 ரன்கள், கமிந்து மென்டிஸ் 71 பந்துகளில் 46 ரன்கள், ஜனித் லியனாகே 52 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தனர்.
நியூசிலாந்து அணிக்கு 291 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது இலங்கை அணி. நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். நாதன் ஸ்மித் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து நியூசிலாந்து அணி சேசிங் செய்யத் துவங்கியது. அந்த அணியின் மூன்றாம் வரிசை வீரர் மார்க் சாப்மேன் நிலைத்து நின்று ஆடினார். அவர் 81 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வரிசையாக நடையைக் கட்டினர். சாப்மேனுக்கு அடுத்து அதிகபட்சமாக ஒன்பதாம் வரிசை வீரர் நாதன் ஸ்மித் 17 ரன்களும், ஏழாம் வரிசை வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் 13 ரன்களும் எடுத்தனர்.
டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் மூன்று வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். துவக்க வீரர் வில் யங், விக்கெட் கீப்பர் டாம் லாதம் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய மூவரும் டக் அவுட் ஆகி இருந்தனர். ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னும், டேரில் மிட்செல் 2 ரன்களும் மட்டுமே எடுத்தனர்.
இதை அடுத்து நியூசிலாந்து அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்தா பெர்னாண்டோ, மகீஷ் தீக்ஷனா மற்றும் எஹ்சான் மலிங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இலங்கை அணி ஏற்கனவே இழந்து, தொடரையும் இழந்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆறுதல் அடைந்தது.