சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தமிழகத்தில் மரண தண்டனை.
தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்த பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ் ஆகிய சட்டங்களை, தமிழ் நாட்டுக்குப் பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாக்களை முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
வெள்ளிக்கிழமை இந்த மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
12 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை, மீண்டும், மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை விதிக்க மேற்கண்ட சட்டமசோதாக்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எரிதிரவத்தை வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை, ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டுகள் முதல் ஆயுள்கால சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வன்கொடுமைக்கு 14 ஆண்டு கடுங்காவல் முதல் அபராதத்துடன் ஆயுள்கால சிறைத் தண்டனை, காவல் துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளர் வன்கொடுமை குற்றவாளியாக இருந்தால் 20 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டமசோதாக்களை வரவேற்று உறுப்பினர்கள் பாலாஜி (விசிக), வேல்முருகன் (தவாக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜி.கே.மணி (பாமக), செல்வபெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோர் பேசினர்.
“இந்த சட்டங்களை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க வகை செய்ய வேண்டும். இச்சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் குற்றவாளிகளை விரைவாக தண்டிக்க உரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.