உடல் உறுப்புகளை தானம் வழங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு
மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் தேசிய உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அமைப்பின் (நோட்டோ) தலைவர் டாக்டர் அனில் குமார் கூறியதாவது:
உடல் உறுப்புகளை தானம் வழங்கும் மத்திய அரசு ஊழியர்கள் 42 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு (சிஎல்) எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் வழங்கினால் அவர்கள் இந்த தற்செயல் விடுப்புக்கு தகுதியானவர்கள்.
உடல் உறுப்புகளை ஒருவரிடம் எடுப்பது என்பது மிகப்பெரிய அறுவைச் சிகிச்சையாகும். அப்படி உடல் உறுப்பு எடுக்கப்பட்ட பிறகு குணமாவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிப்பது, மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குணமடைவதற்காக ஓய்வெடுப்பது போன்றவற்றுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கு 42 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பை மருத்துவமனையில் சேர்ந்த நாளில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் எடுக்க முடியும்.
அல்லது அரசு மருத்துவர் அறிவுரையின்படி சிகிச்சைக்கு ஒரு வாரத்துக்கு முன்கூட்டியும் இந்த தற்செயல் விடுப்பை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அனில் குமார் கூறினார்.