பல கோடி மதிப்பிலான சொகுசு ஹோட்டல் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் எரிந்து நாசம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் திரைப்பட நகரமான ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. இதன்காரணமாக ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது. கடந்த 7-ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில் உலகின் மிகவும் அதிநவீன சொகுசு விடுதியான பசுபிக் பாலிசாடஸ் என்ற பெயரிலான சொகுசு விடுதி, இந்த காட்டுத் தீயில் சிக்கி எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.10,375 கோடியாகும். 18 படுக்கை அறைகள் கொண்ட இந்த சொகுசு விடுதியானது உலகிலேயே உள்ள ஹோட்டல்களில் அதிக கட்டணத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது.
லூமினார் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஸ்டின் ரஸ்ஸல் என்பவருக்குச் சொந்தமான ஹோட்டலாகும் இது என்று டெய்லி மெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த சொகுசு விடுதியின் கட்டணம் மாதத்துக்கு சுமார் ரூ.3.74 கோடியாகும். இங்கு உலகில் உள்ள அத்தனை வசதிகளும் அமைந்துள்ளன. அதிநவீன சமையலறை, 20 பேர் அமரக்கூடிய திரையரங்கம், இரவில் வானத்தை ரசிக்க திறந்து மூடும் வகையிலான கூரை அமைப்பு, ஸ்பா, ஆர்ட் காலரி, நடனமாடுவதற்கான பால்ரூம் உள்ளிட்டவை அடங்கும்.