காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தப் போராடும் அமெரிக்கா!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் (Los Angeles) கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர ஆயிரக்கணக்கான தீயணைப்பாளர்கள் போராடிவருகின்றனர்.
மீண்டும் பலத்த காற்று வீசினால், இன்னும் பல இடங்களுக்குக் காட்டுத்தீ பரவக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதுவரை 16 பேர் மாண்டனர். மேலும் 13 பேரைக் காணவில்லை.
பலிசேட்ஸ் (Palisades) பகுதியில் வேகமாக பரவும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பாளர்கள் அயராது உழைக்கிறார்கள்.
24 மணிநேர இடைவெளியில் காட்டுத்தீ அங்கு மேலும் 400 ஹெக்டர் நிலப்பரப்பை சாம்பலாக்கியது.
100,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளின்றி தவிக்கின்றனர்.
வசிப்பிடம் திரும்புவோர் சேதத்தை அளவிடும்போது நிலையற்ற கட்டடங்கள், விழுந்துகிடக்கும் மின் கம்பிகள் முதலியவற்றிலிருந்து விலகி இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மில்லியன் கணக்கானோரைப் பாதிக்கும் அபாயமான புகையால் பொது சுகாதார அவசரநிலையைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் அதிகாரிகள் உள்ளனர்.
லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீயாக இது கருதப்படுகிறது.
சேதமதிப்பு சுமார் 150 பில்லியன் டாலரை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மத்திய அரசாங்கம் பேரிடர் நிவாரண நிதி வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.