சீன நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை சீனா பயணம்.
இலங்கை- சீன நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (14) செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை 14 முதல் 17 வரை சீனாவில் தங்கியிருப்பார் என, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி
ஜி ஜிபிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார்.
மேலும் சீனப் பிரதமர் லி கெகியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லிஜியையும் அவர் சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதியின் சீன மக்கள் குடியரசு விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் சீன உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, முதலீடு, மின்சாரத் துறை, கடற்றொழில் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய தலைப்புகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சீனாவின் ஆதரவைப் பெறுதல் என்பவையும் இதில் அடங்கும். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறுகையில், இந்தத் தகவல்களில் வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் பொருளாதார மீட்சிக்கான சீனாவின் ஆதரவு பற்றிய தகவல்கள் அடங்கும்.
முதலீடு, மின்சாரம், கடற்றொழில், பொருளாதாரம் உட்பட 07 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட தீர்மானம்
மேலும், சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லிஜியையும் சந்திப்பார்கள்.
முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளும் அடங்கும் என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்தார்.
கடற்றொழில் துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தை வழங்குதல் உள்ளிட்ட சமூக நல அம்சங்களை உள்ளடக்கும், அதே நேரத்தில் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவைப் பெறும், மேலும் சீன உதவியுடன் சூரிய சக்தி மின் திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் ஒரு பகுதியாக உள்ளடக்கப்படும். கல்வித் துறை தொடர்பான கலந்துரையாடல்களின் கீழ், இலவச பாடசாலை சீருடைகளைப் பெறுவது மற்றும் பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் சுவர் பலகை திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படும்.
இரண்டு வர்த்தக மாநாடுகள் நடத்தப்படும் என்றும், அவற்றில் ஒன்று சைனா ஹார்பர், சினோபெக் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் துறையிலுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்களுடன் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முதலீட்டை ஈர்ப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வாகன ஒன்றிணைப்பு தொழிற்சாலைகளையும் ஜனாதிபதி பார்வையிட உள்ளார்.
ஜனாதிபதியின் சீன விஜயத்தினால் இலங்கைக்கு பலவித நன்மைகள்…..
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். அதேநேரம் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணமாகவும் இது அமைந்துள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்று இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதே மாதம் 23 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து நாட்டின் தலைமையையும் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தனது முதலாது வெளிநாட்டுப் பயணத்தை அயல்நாடான இந்தியாவுக்கு கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் ஜனாதிபதி முன்னெடுத்தார். அத்தோடு முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கைகளும் இலங்கை, இந்திய தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
தமது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி, நாளை சீனாவுக்கு விஜயம் செய்கிறார். இவ்விஜயத்தின் போது நான்கு நாட்கள் சீனாவில் தங்கி இருக்கும் ஜனாதிபதி, இருதரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்ற உள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளதோடு, சீனப் பிரதமர் லி கெகியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லிஜியையும் சந்திக்க உள்ளார்.
அத்தோடு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வாகன ஒன்றிணைப்பு தொழிற்சாலைகளையும் ஜனாதிபதி பார்வையிடவிருக்கிறார்.
ஜனாதிபதியின் சீன மக்கள் குடியரசு விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக முதலீடு, மின்சாரம், கடற்றொழில், சுற்றுலா, கல்வி, விவசாயம் உள்ளிட்ட ஏழு துறைகள் தொடர்பில் ஜனாதிபதியின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய தலைப்புகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு சீனாவின் ஆதரவு தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 1957 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது. கி.பி 410 இல் சீன நாடுகாண் பயணி பாகியன் இலங்கைக்கு வருகை தந்து இரண்டு ஆண்டுகள் இங்கு தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர் ஒரு வணிகக் கப்பலில் அவர் சீனா திரும்பியதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலத் தொடர்பாடல் இருந்து வருகிறது. குறிப்பாக இந்நாடு சுதந்திரமடைந்த பின்னர் 1952 இல் சீனாவுடன் அரசி_- இறப்பர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
1995 களின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் அதிக நெருக்கம் ஏற்பட்டது. சீனாவின் உதவியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் நுரைச்சோலை அனல் மின்நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், தாமரைத் தடாக அரங்கம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாகும்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும். அத்தோடு இலங்கையின் மறுமலர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாரிய நன்மைகளைக் கொண்டு வரக்கூடிய விஜயமாகவும் ஜனாதிபதியின் இப்பயணம் அமையும். அதுவே மக்களின் நம்பிக்கையாக உள்ளது.