மகா கும்பமேளாவின் முதல் நாளான இன்று குடும்பத்திலிருந்து தொலைந்துபோன 250 பேர் குடும்பத்துடன் சேர்ப்பு!
மகா கும்பமேளாவை தொடங்கியதையடுத்து, பிரயாக்ராஜில் இன்று லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தில், குடும்பத்திலிருந்து தொலைந்துபோன 250 பேர், கும்பமேளா நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 45 நாள்கள், பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெறவிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை தொடங்கியது. இன்று காலை முதலே லட்சக்கணக்கான மக்கள் சங்கமமும் பகுதியில் புனித நீராட குவிந்தனர்.
இன்று காலையிலேயே சங்கமம் பகுதிக்கு லட்சக்கணக்கானோர் வந்த போது, குடும்பத்திலிருந்து பெண்களும், குழந்தைகளும் காணாமல் போகும் நிலை ஏற்பட்டது. இவர்களை மீட்க, காணாமல் போனவர்களை தேடுவதற்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக உதவிகளும் பெறப்பட்டன.
காணாமல் போனவர்களின் பெயர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல்கள் ஒலிப்பெருக்கி வாயிலாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால், காணாமல் போனவர்கள் உடனடியாக அவர்களது குடும்பத்துடன் இணைய வசதியாக இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் இன்று மட்டும் 200 முதல் 250 பேர் தங்களது குடும்பத்துடன் சேர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று தொடங்கி, மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு நடைபெறும் ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில், உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்ற என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது.
இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்ப மேளா நடத்தப்படுகிறது. எனினும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகாகும்ப மேளா மதரீதியில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.