தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்களின் பின்னர் ஆஸ்திரியாவில் அமையும் புதிய ஆட்சி? – சுவிசில் இருந்து சண் தவராஜா

மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரிகள் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. தற்போதைய மையவாத ஆட்சிக் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து தலைமை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கார்ல் நெஹம்மர் தனது பதவியைத் துறந்ததுடன் ஆஸ்திரிய மக்கள் கட்சியின் தலைமைப் பதவியையும் துறந்துள்ளார். இதனையடுத்து புதிய ஆட்சியை அமைக்குமாறு தீவிர வலதுசாரிக் கட்சியான ஆஸ்திரிய சுதந்திரக் கட்சியின் தலைவரான ஹேர்பட் கிக்கல் அவர்களை நாட்டின் ஜனாதிபதி அலெக்சான்டர் வான் டெர் பெல்லன் கோரியுள்ளார். யனவரி 6ஆம் திகதி இருவருக்குமான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றபோது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடதுசாரிகள் மற்றும் யூத மாணவர்கள் பங்கு கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ‘நாஸிக்களே வெளியேறு’, ‘வலதுசாரித் தீவிரவாத ஆஸ்திரியா எங்களுக்குத் தேவையில்லை’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆஸ்திரியாவில் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவின்படி முதல் தடவையாக சுதந்திரக் கட்சி 28.85 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது. ஹிட்லரின் எஸ்.எஸ். துணை இராணுவத்தின் சிரேஸ்ட உறுப்பினராகப் பதவி வகித்த அன்ரன் றைன்தால்லர் என்பவரால் 1956ஆம் ஆண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. தீவிர வலதுசாரிக் கருத்துக்களுக்கு எப்போதுமே பேராதரவு வழங்காத மனோநிலையைக் கொண்ட ஆஸ்திரிய மக்கள் செப்டெம்பர் தேர்தலில் இந்தக் கட்சிக்கு வழங்கிய ஆதரவு அப்போது ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்டது.

இடதுசாரி பசுமைக் கட்சியைச் சேர்ந்தவரான ஜனாதிபதி வான் டெர் பெல்லன் பெரும்பான்மையைப் பெற்ற கட்சியான சுதந்திரக் கட்சியை ஆட்சியமைக்குமாறு கோராமல் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்த நாஹெம்மர் தலைமையிலான மக்கள் கட்சியை ஆட்சியமைக்குமாறு கோரியிருந்தார். ‘லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஆட்சி அமைய வேண்டும்’ என அவர் அப்போது கூறியிருந்தார். சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் எதுவும் தயாராக இல்லை என அவர் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியும் இருந்தார். எனினும் தற்போதைய கள யதார்த்தம் காரணமாக அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் மக்கள் கட்சி 26.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தது. தேர்தலின் போது ஆட்சியதிகாரத்தில் இருந்த அக் கட்சி 21.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற சமூக ஜனநாயகக் கட்சியுடனும் சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுடனும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. மூன்று மாதங்கள் தொடர் பேச்சுக்கள் நடத்தியும் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் வராத நிலையில் தற்போது தலைமை அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

ஆஸ்திரிய நாடாளுமன்றில் 183 ஆசனங்கள் உள்ளன. ஏதாவது ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியமைக்க ஆகக் குறைந்தது 92 ஆசனங்களாவது தேவை. நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக உள்ள சுதந்திரக் கட்சியிடம் 57 ஆசனங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் உள்ள மக்கள் கட்சியிடம் 51 ஆசனங்கள் உள்ளன. மூன்றாவது பெரிய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி 41 ஆசனங்களையும், புதிய ஆஸ்திரியா மற்றும் லிபரல் பேரவை என்ற கூட்டணி 18 ஆசனங்களையும், பசுமைக் கட்சி 16 ஆசனங்களையும் கொண்டுள்ளன.

தற்போதைய நிலையில் சுதந்திரக் கட்சி மக்கள் கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி ஒரு இணக்கப்பாட்டை எட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிகின்றது. சுதந்திரக் கட்சியுடன் பேச்சுக்களை நடத்துவதை கடந்த காலங்களில் நாஹெம்மர் எதிர்த்து வந்திருந்தார். சுதந்திரக் கட்சியின் தலைவரான கிக்கல் ஒரு சதிக் கோட்பாட்டாளர், அத்துடன் அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒருவர் என்பதே அவரின் கருத்தாக இருந்தது. எனினும் நாஹெம்மர் இப்போது பதவி விலகியுள்ள நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் கட்சியில் தற்காலிக தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள கிறிஸ்ரியன் ஸ்ரொக்கர் கிக்கலுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுக்களில் தான் பங்கெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரும் முன்னைய காலங்களில் சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதை எதிர்த்து வந்தவரே. ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில் இந்தக் கூட்டு தவிர்க்க முடியாத ஒன்று. மீண்டும் ஒரு தேர்தலுக்குச் செல்வதில் அர்த்தமில்லை என்பது ஸ்ரொக்கரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் பெரும்பாலும் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்து வரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் அடிப்படை முரண்பாடுகள் பல உள்ளன, அவற்றை இரண்டு கட்சிகளும் எவ்வாறு கையாளும் என்பதிலேயே எதிர்காலம் உள்ளது.

மக்கள் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியாக பசுமைக் கட்சி உள்ளது. ஆனால் சுதந்திரக் கட்சிக்கும் மக்கள் கட்சிக்கும் இடையில் புதிய கூட்டணி உருவாகுமானால் அதில் பசுமைக் கட்சி பங்கு கொள்ளுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய விடயம்.

சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர் நாஸி சித்தாந்தத்தைக் கொண்டவர் என்றாலும் பின்னாளில் வந்த தலைவர்கள் தம்மை நாஸி சித்தாந்தத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் அகதிகள் விடயத்தில் இறுக்கமான கொள்கை உடையவர்களாக உள்ளனர். பழமைவாதக் கட்சியான மக்கள் கட்சி அகதிகள் விடயத்தில் ஓரளவு நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. தவிர, உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆயுத விநியோகம், ரஸ்யா மீதான பொருளாதாரத் தடை என்பவற்றை சுதந்திரக் கட்சி வன்மையாக எதிர்த்து வருகின்றது. இந்த இரண்டு விடயங்களும் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படுவதற்குத் தடையாக அமையலாம் என நம்பப்படுகின்றது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் அண்மைக் காலமாக வலதுசாரிக் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றி வருவதை அவதானிக்க முடிகின்றது. அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரியாவும் இணைய உள்ளது. அது மாத்திரமன்றி தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதையும் காண முடிகின்றது. தற்போதைய நிலையில் ஆஸ்திரியாவில் புதிய தேர்தல் நடைபெறுமாயின் சுதந்திரக் கட்சி மேலும் அதிக விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிக எண்ணிக்கையான ஆசனங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் பெறாத ஒரு சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுள் ஆஸ்திரியாவும் ஒன்று. இவ்வாறு நேட்டோவில் அங்கத்துவம் பெறாத ஏனைய ஐரோப்பிய நாடுகளாக அயர்லாந்து மற்றும் மால்ரா ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்றுவரும் கட்சிகளுக்கு இடையிலான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படுமாயின் அடுத்துவரும் சில நாட்களில் புதிய அரசாங்கம் அமையலாம். இல்லாதுவிடில் புதிய தேர்தலைச் சந்திப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

Leave A Reply

Your email address will not be published.