கடத்தப்பட்ட மாணவியை மீட்க உயிரைப் பணயம் வைத்த அர்ஷாத்: இலங்கை பொலிஸாரின் பாராட்டுக்கள்!
கடத்தப்பட்ட மாணவியை மீட்க உயிரைப் பணயம் வைத்த அர்ஷாத்: இலங்கை பொலிஸாரின் பாராட்டுக்கள்!
“நான் அக்குரணைப் பகுதியில் வேலை செய்கிறேன். காலையில், நான் வேலைக்குச் செல்லத் தயாராகி, பஸ் வரும் வரை காத்திருந்தபோது, இரண்டு பாடாசலை சிறுமிகள் என்னைக் கடந்து சென்றனர். அந்த நேரத்தில், ஒரு சிறிய கறுப்பு வேன் வந்து நின்றது, இரண்டு சிறுமிகளில் ஒருவரை இழுத்து வேனில் ஏற்றிச் சென்றதை நான் கண்டேன். மற்ற சிறுமி பயத்தில் கூச்சலிட்டார். வேன் புறப்பட தயாரானதும், நான் ஓடிச் சென்று வேனுக்குள் குதித்தேன்.”
தவுலகல – அம்பெக்க பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அர்ஷாத் அஹமட், தனது வீரச் செயலை வார்த்தைகளில் விபரிக்கிறார்.
50 இலட்சம் ரூபா கப்பம் பெறும் நோக்கில் தவுலகல ஹபுகஹயடதென்ன பிரதேசத்தில் பாடசாலை சென்ற மாணவியை வேன் ஒன்றில் கடத்திற்செல்ல முற்பட்ட தருணத்தில், பாடசாலை மாணிவியை காப்பாற்றுவதற்காக தைரியமாக முன்னின்ற அர்ஷாட் என்ற இளைஞன் தொடர்பில் இன்று நாடே பேசுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் பதிவாகி இருந்தன. குறித்த காணொளியும் ஊடகங்களில் வௌியாகி இருந்தன. அதில் மாணவியை வேனுக்குள் இழுத்து கடத்த முற்படுகையில், அர்ஷாட் என்ற இளைஞன் திடீரென ஓடிச்சென்று தனது பையை வீசிவிட்டு அந்த வேனுக்குள் பாய்ந்து உள்ளே சென்றார்.
பின்னர், வேனில் தொங்கிய இளைஞன் வேனுக்குள் இருந்த ஒருவருடன் தாக்குதலில் ஈடுபடுவதும், வேன் அதிவேகமாக நகர்ந்து செல்வதையும், அந்த இளைஞன் வேனில் தொங்கியதையும் காட்சிகள் காட்டுகின்றன.
எனினும், அந்த இளைஞனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸாரிடம் கேட்ட போதிலும், அவர் பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, ஹபுகஹயடதென்ன, தவுலகலவில் உள்ள முச்சக்கர வாகன நிறுத்துமிடத்தில் கேட்டறிந்து, அர்ஷாத்தின் வீடு நோக்கி எமது செய்தியாளர் சென்றார்.
இதன்போது, அர்ஷாத் காயத்துடன் காணப்பட்டதாகவும், சம்பவத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தார் என்றும் தெரியவந்தது.
“ஐயோ அண்ணா, நான் வேலைக்காக வௌிநாட்டுக்குச் செல்லவுள்ளேன். எனவே செல்ல முடியாமல் போய்விடும்.” என்று அர்ஷத் தான் சந்தித்த கொடூரமான அனுபவத்தை விபரித்தார்.
“இந்தக் கடத்தல் எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு பாடசாலை சிறுமியை கடத்துவது என்பது எனக்கு புரிந்தது. நான் வேலைக்குப் போகும் நோக்கத்தை விட்டுவிட்டு வேனை நோக்கி ஓடினேன். அப்போது சிறுமியை வேனுக்குள் இழுத்துவிட்டனர். நான் சென்று அங்கிருந்த ஒருவரைப் பிடித்து தொங்கினேன். அவர் என்னை தாக்கினார். நான் கைகளை விடவில்லை. சிறுமியை வௌியே எடுக்க முயற்சித்த வேளையில் வேன் புறப்பட்டுச் சென்றது. நான் தொங்கிக்கொண்டு இருந்ததால் அவர்களால் வேனின் கதவை மூட முடியவில்லை. உள்ளே இருந்த நபர் என்னை தாக்கிக்கொண்டிருந்த போதே என் கைகளை வெட்டினார். பின்னர் என்னை வேனில் இருந்த வௌியே தள்ளிவிட்டனர். வேன் வேகமாக சென்ற வேளையில் நான் கீழே விழுந்து காயமடைந்தேன். அப்பாவுக்கும் மாமாவுக்கும் தொலைபேசி அழைப்பை எடுத்து அவ்விடத்திற்கு வரச்சொன்னேன். என் கை, கால்கள், முகம், விர்ல்கள் காயமடைந்திருந்தன. அப்பாவுடன் சென்று மருந்து எடுத்தேன். அந்த வேனின் சாரதியுடன் மூன்று பேர் வேனில் இருந்தார்கள். இது எங்கள் குடும்பப் பிரச்சினை என்று உள்ளே இருந்தவர்களில் ஒருவர் தெரிவித்தார்”
எவ்வாறாயினும், அர்ஷாட்டின் இந்த வீர செயலை இலங்கை பொலிஸார் முகநூல் ஊடாக பாராட்டியுள்ளனர்.
அதில், “கடத்தப்பட்ட பாடசாலை மாணவியை மீட்கச் சென்ற இளைஞனுக்கு இலங்கை பொலிஸாரின் பாராட்டுக்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.