நைஜீரியாவில் விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், தீவிர மதவாத சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி போக்கோ ஹராம் அமைப்பு 2009-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
பொது இடங்களில் கூடும் அந்த அமைப்பினர், அவ்வப்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமியரை கடத்துவதையும் அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இங்கு, போர்னோ மாகாணத்தில் உள்ள கிராமத்தில் நேற்று புகுந்த போக்கோ ஹராம் தீவிரவாதிகள், கண்ணில் படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், போர்னோ டம்பா சமூகத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை அந்த மாகாண கவர்னர் பாபாகானா உமாரா சுளும் உறுதிப்படுத்தினார்.
இந்த அமைப்பு துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 35,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு பயந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
‘பெண்கள் கல்வி பயிலக் கூடாது; ஆண்கள் மதக் கல்வியைத்தான் பெற வேண்டும்; இஸ்லாமியச் சட்டப்படிதான் ஆட்சி நடக்க வேண்டும், அனைவரும் இஸ்லாமிய மதத்தைத் தழுவ வேண்டும்’ எனும் குறிக்கோள்களுடன் செயல்படும் இந்த அமைப்புக்கு, அல் – குவைதா அமைப்பின் ஆதரவு உள்ளது.