உச்ச நீதிமன்ற நீதிபதியாக வினோத் சந்திரன் பதவியேற்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரனுக்கு இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதி சந்திரன் பதவியேற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகளில் 33 பேராக உயர்ந்துள்ளது.

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியத்தின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

தலைமை நீதிபதி கன்னா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சந்திரனின் பெயரைப் பரிந்துரைத்தது.

கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2011-இல் பதவியேற்ற கே.வினோத் சந்திரன், கடந்த 2023-இல் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக 11 ஆண்டுகளுக்கு மேலாகவும், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓராண்டுக்கு மேலாகவும் அனுபவம் கொண்டவா்.

பணிமூப்பு அடிப்படையில் ஒட்டுமொத்த உயா்நீதிமன்ற நீதிபதிகளில் 13-ஆவது இடத்தில் உள்ள இவா், கேரள உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த நீதிபதிகளில் முதலிடத்தில் உள்ளாா். அத்துடன், கேரள உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த நீதிபதிகள் யாரும் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியில் இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு, கே.வினோத் சந்திரனை பரிந்துரைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.