உத்தரப் பிரதேசத்தில் உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் படுகாயம்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆக்ராவின் கரிபார்வத் மாவட்டத்தில் இயங்கி வந்த மெட்லே பிரட் பாக்ட்ரி எனும் உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், பிரட் உற்பத்திக்காக சமையல் எரிவாயுவில் இயங்கும் மிகப்பெரிய அடுப்புகள் (ஓவன்) பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஜன.16) மதியம் 1 மணியளவில் சுமார் 20 தொழிலாளர்கள் பிரட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கர சத்ததுடன் அந்த அடுப்புகள் வெடித்துள்ளன. இந்த வெடி விபத்தின் சத்தமானது சில கிலோ மீட்டர்கள் தூரம் வரையில் கேட்டதாகக் கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அந்த தொழிற்சாலையினுள் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 தொழிலாளர்களில் 3 பேரது நிலைக் கவலக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில் சமையல் எரிவாயு கசிந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.