20 ஆண்டுகளாக நீதியைக் கோரும் நிமலராஜன் : சுவிசிலிருந்து சண் தவராஜா
ஊடகர் அமரர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 20 ஆவது நினைவுதினம் நாளை. யுத்த காலகட்டத்தில் நடைபெற்ற பல்லாயிரக் கணக்கான கொலைகளுள் அதுவும் ஒன்று என வகைப்படுத்தக் கூடியதே ஆயினும் அதில் ஏதோவொரு முக்கியத்துவம் இருப்பதை மறைப்பதற்கில்லை.
யுத்தத்தோடு தொடர்புடைய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலையை நாம் அமரர் நிமலராஜனில் இருந்தே ஆரம்பிக்கின்றோம். எதனால் இந்தக் கணக்கீடு உருவாகியது எனத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இந்தக் கொலை 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி இடம்பெற்றது. இந்தக் கொலை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் இன்றுவரை கொலையாளிக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. நிமலராஜனின் கொலை மாத்திரமன்றி இலங்கைத் தீவில் படுகொலை செய்யப்பட்ட எந்தவொரு ஊடகவியலாளரின் கொலைக்கும் காரணமானவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்பட்டதில்லை என்பதே கசப்பான யதார்த்தம்.
இலங்கைத் தீவின் ஊடக சுதந்திரம் தொடர்பான வரலாறு இருண்ட பக்கங்களை அதிகம் கொண்டதாகவே இருந்து வருகின்றது. றிச்சட் டி சொய்சாவின் படுகொலையுடன் 18 பெப்ரவரி 1990 இல் ஆரம்பமான இந்த இருண்ட யுகம் – ஆட்சி மாற்றங்கள் பலவற்றைக் கண்ட பின்னரும் – இன்றுவரை தொடர்கின்றது. சமூகத்தின் நான்காவது தூண் எனச் சிலாகிக்கப்படும் ஊடகத்துறையைக் காப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களை அச்சுறுத்தும் வகையிலான காரியங்களே இன்றுவரை முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
நிமலராஜன் அவர்களின் கொலையை நினைவுகூரும் இன்றைய தருணத்தில் கூட முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்றவேளை தாக்கப்பட்ட இரண்டு ஊடகர்களுக்காக நீதிவேண்டிப் போராட வேண்டிய சூழலில் நாம் நிற்கிறோம்.
நிமலராஜன் கொல்லப்பட்ட அந்த நாளில் அல்லது அதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட, தாக்குதலுக்கு இலக்காகிய வேளைகளில் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் அனைவரும் இணைந்து குரல் கொடுத்திருந்தால் இன்றைய நிலையில் மாற்றம் வந்திருக்குமோ என்னவோ?
ஊடகங்களை அடக்கும் செயன்முறைகளில் ஈடுபடுவோர் வெறுக்கும் மற்றொரு செயல் ஊடகர்களின் கொலைகள் நினைவுகூரப்படுவது. எனவே, ஊடகர்களின் பெறுமானத்தை உணர்ந்து கொண்டவர்கள் கொல்லப்பட்ட ஊடகர்களின் நினைவுதினங்களை அனுட்டிப்பது என்பதுவும் ஒருவகையான போராட்ட வடிவமே. அந்த வகையில் நிமலராஜனின் படுகொலை மாத்திரமன்றி இலங்கைத் தீவில் படுகொலையான அனைத்து ஊடகவியலாளர்களையும் நினைவில் கொள்வது எமது கடமையாகின்றது.
இலங்கைத் தீவில் படுகொலையான றிச்சட் டி சொய்சா அரைத் தமிழராக இருந்த போதிலும் அவர் தமிழ் ஊடகராகச் செயற்பட்டிருக்கவில்லை. எனவே, முதன்முதலாகப் படுகொலையான தமிழ் ஊடகவிலாளராக அவரைக் கொள்ள முடியாது.
அந்த வகையில், 1981 யனவரி 3 ஆம் திகதி சுன்னாகத்தில் கொல்லப்பட்ட புகைப்பட ஊடகரான நவரெட்ணத்தை இலங்கைத் தீவில் படுகொலை செய்யப்பட்ட முதலாவது ஊடகராகக் கொள்ள முடியும். ஒரு வருட காலத்தில் 1982 யனவரி 2 ஆம் திகதி புதியபாதை பத்திரிகை ஆசிரியரான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
1986 ஆம் ஆண்டு யனவரி முதலாந் திகதி மட்டக்களப்பு – வீரகேசரியின் வவுணதீவு நிருபராகப் பணியாற்றிய எம். இரத்தினசிங்கம் கொலையானார். அதற்கும் முன்னதாக 1985 இல் அம்பாறை – தம்பிலுவில் பிரதேச ஊடகரான ரி.தயானந்தன் என்பவர் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது.
அமரர் நிமலராஜனுக்கு முன்னதாகவும் பின்னதாகவும் படுகொலை செய்யப்பட்ட ஊடகர்களின் பட்டியல் நீளமானது.
– கே.எம்.வாசகர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 1987, யாழ்ப்பாணம்
– எஸ்.நடராஜா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 17.10.1987, யாழ்ப்பாணம்
– கந்தையா கந்தசாமி, உரிமையாளர், Saturday Review, யூன் 1988, யாழ்ப்பாணம்
– எம்.செல்வராஜா, ஏரிக்கரை குழுமம், 1988, காங்கேசன்துறை
– சீ.மகாலிங்கம், சண், ஐலன்ட், 11.05.1989, நெல்லியடி
– எம்.நவரெட்ணம், ஈழமுரசு, 1989 நவம்பர், யாழ்ப்பாணம்
– எம்.அமிர்தலிங்கம், உரிமையாளர் – ஈழமுரசு, 1989 நவம்பர், யாழ்ப்பாணம்
– ஐய்யனார் சண்முகலிங்கம், ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, விடுதலை, 06.11.1989, யாழ்ப்பாணம்
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் நடைபெற்ற மற்றொரு கொலையையும் இந்தவேளையில் நினைவுகூருதல் பொருத்தமாக இருக்கலாம். முரசொலி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ஊடகத்துறையில் 50 வருடகால சேவையைப் பூர்த்தி செய்தவருமான எஸ். திருச்செல்வம் அவர்களின் ஒரேயோரு மகனான அகிலன் 1989 மே மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது தந்தையைக் கொலைசெய்ய முயற்சித்தவர்களே, தமது நோக்கம் நிறைவேறாத படியால் மகனைக் கொலைசெய்தார்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
– எம்.வர்ணகுலசிங்கம், கொண்டல், யூலை 1990, மட்டக்களப்பு
– குமரகுரு குகமூர்த்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், Saturday Review, 06.09.1990, கொழும்பு (வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமற் போனவர்)
– கே.எஸ்.ராஜா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 03.12.1994, கொழும்பு
– எஸ்.எஸ்.கணேசபிள்ளை (வரணியூரான்), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 30.08.1995, கொழும்பு
– தியாகராஜா செல்வநிதி, பிரதம ஆசிரியர் – தோழி, 1997, யாழ்ப்பாணம்
– சசி கிருஸ்ணகுமார், சுயாதீன ஊடகர், 29.09.1998, யாழ்ப்பாணம்
– ரமேஸ் அற்புதராஜா, தினமுரசு, 02.11.1999, கொழும்பு
– பஸ்தியான் அந்தோனி மரியதாஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 31.12.1999, வவுனியா
இவை அனைத்தும் – எனது பார்வையில் பட்ட – நிமலராஜனுக்கு முந்திய ஊடகர்களின் படுகொலைகள். அரசாங்கமும், அரசாங்க ஆதரவு ஆயுதக் குழுக்களும், விடுதலைப் புலிகளும் இந்தக் கொலைகளைப் புரிந்தனர். இத்தனை கொலைகள் நடந்தும் அவற்றுக்கு எதிரான எதிர்வினைகள் பாரியதாக இல்லாமலிருந்த சூழ்நிலையில் நிமலராஜனின் பின்னும் ஊடகர் படுகொலைகள் ஓய்ந்தபாடாக இல்லை.
றிச்சட் டி சொய்சா படுகொலை செய்யப்பட்ட 1990 ஆம் ஆண்டில் அந்தக் கொலைக்கு எதிராக சர்வதேசக் கண்டனங்கள் முதன்முதலாக எழுந்தன. ஆனால் அதற்கு முன்னரும் ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் 1989 ஆம் ஆண்டில் ஒருசில சிங்கள ஊடகர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் ஊடகப் பணியின் விளைவாகக் கொல்லப்பட்டார்களா அன்றில் அரசியல் செயற்பாடு காரணமாகக் கொல்லப்பட்டார்களா என்பதில் தெளிவில்லை.
நிமலராஜன் உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமன்றி பன்னாட்டு ஊடகங்களிலும் பணியாற்றியதன் காரணமாக அவரது கொலைக்கு ஒரு உலகளாவிய வெளிச்சம் கிட்டியது. அந்தக் காலப் பகுதியில் உள்நாட்டிலும் ஊடக அமைப்புகள் செயற்படத் தொடங்கியிருந்தன. அதன் விளைவாக நிமலராஜனின் கொலை உள்நாட்டிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஒருசில வருடகாலம் ஓய்ந்திருந்த தமிழ் ஊடகர்களின் கொலை 2004 அம் ஆண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து மட்;டக்களப்பு மாவட்டத் தளபதியாக விளங்கிய கருணாவின் பிரிவைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பமாகியது. மூன்றாம் கட்ட ஈழ யுத்தத்தோடு ஆரம்பமாகிய இத்தகைய கொலைகள் 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற நாள்வரை தொடரவே செய்தது.
– ஐயாத்துரை நடேசன், வீரகேசரி, ஐபிசி, 31.05.2004, மட்டக்களப்பு
– கந்தசாமி பாலநடராஜ ஐயர், தினமுரசு, 16.08.2004, கொழும்பு
– தராக்கி டி சிவராம், தமிழ்நெற், 28.04.2005
– ரேலங்கி செல்வராஜா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 12.08.2005, கொழும்பு
– சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சுடரொளி, 24.01.2006
– ரஞ்சித்குமார், உதயன், 02.05.2006, யாழ்ப்பாணம்
– சுரேஷ்குமார், உதயன், 02.05.2006, யாழ்ப்பாணம்
– சின்னத்தம்பி சிவமகாராஜா, நிர்வாக இயக்குநர், நமது ஈழநாடு, 20.08.2006, யாழ்ப்பாணம்
– சுப்பிரமணியம் இராமச்சந்திரன், தினக்குரல், வலம்புரி, 15.02.2007, யாழ்ப்பாணம் (கடத்தப்பட்டுக் காணாமற் போனவர்)
– சந்திரபோஸ் சுதாகரன்(சுபாஷ்), ஆசிரியர் – நிலம், 16.04.2007, வவுனியா
– செல்வராஜா ரஜிவர்மன், உதயன், 29.04.2007, யாழ்ப்பாணம்
– சகாதேவன் நிலக்சன், உதயன் – பயிற்சிப் பத்திரிகையாளர், 01.08.2007, யாழ்ப்பாணம்
– இசைவிழி செம்பியன்(சுபாஜினி), புலிகளின் குரல், 27.11.2007, வன்னி
– பரராஜசிங்கம் தேவகுமார், சக்தி, 28.05.2008, யாழ்ப்பாணம்
– புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, நிதர்சனம், 12.02.2009, வன்னி
– மகேஸ்வரன், ஈழநாதம், தமிழ்நெற், 06.03.2009, முல்லைத்தீவு
– க.தவபாலன், இசைப்பிரியா, மற்றும் பலர், மே 2009
இந்தக் கொலைப் பட்டியல் முழுமையானது அல்ல. நீங்கள் அறிந்த, எமக்குத் தெரிந்திராத பலரும் இந்தப் பட்டியலில் இருக்கக் கூடும். ஊடகர்களின் படுகொலைகளுக்கு நீதி வேண்டும் ஒவ்வொருவரும் இந்தப் பட்டியலை நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
நிமலராஜன் உட்பட இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் தமது உயிர்களைப் பறிகொடுக்க வேண்டிய நிலை எதனால் உருவானது? ஊடகராகப் பணியாற்றுவது அத்தனை பாரதூரமான குற்றமா? தான் வாழும் சமூகத்தின் நலனில் அக்கறை செலுத்துவது கொலைத் தண்டனைக்கு உரியதா? உண்மைகளை வெளிக்கொணர்வதில் யாருக்கு நட்டம்?
ஒர சமூகத்தின் வளர்ச்சியின் காட்டிகளுள் ஒன்று ஊடகங்கள். எத்துணை சிறப்பான ஊடகத்துறையை ஒரு சமூகம் கொண்டிருக்கின்றதோ அத்தனை சிறப்பான வாழ்வியலை அந்த மக்கள் கொண்டிருப்பர். எனவே, ஒரு சமூகத்தின் வளர்ச்சியைச் சீர்குலைக்க நினைப்பவர் ஊடகங்களைச் சீர்குலைக்க முயற்சி செய்வது இயல்பு. ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்வதன் ஊடாகத் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது ஆக்கிரமிப்பாளர்களின் வழக்கம். இதற்கான எடுத்துக்காட்டுகளை உலகின் பல நாடுகளிலும் காணமுடியும்.
ஊடகவியலாளர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு ஒரு தீங்கு நேரும்போது அவர்கள் சார்ந்த குடும்பங்களே முதலில் பாதிக்கப்படுகின்றன. சமூகத்தின் நலவாழ்வுக்காகக் குரல்தந்து அதனால் பாதிப்பினை எதிர்கொண்ட ஊடகர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் சமூகம் செய்யப்போகும் கைமாறு என்ன? வெறுமனே ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதால் பலன் கிடைக்குமா?
நிமலராஜனின் நினைவுநாளில் நாம் இந்தக் கேள்விகளை உரத்து எழுப்ப வேண்டியுள்ளது. நிமலராஜன் உள்ளிட்ட ஊடகர்களின் படுகொலைக்கு நியாயம் கோரவும், இதுபோன்ற படுகொலைகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கும் ஊடக சமூகம் தயாராகவே உள்ளது. அவர்களுடன் சமூகம் கரங் கோர்க்குமா என்பதுவே பெறுமதியான கேள்வி.