“ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” – தவெக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது தவெக. “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கட்சித் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். நாதக வேட்பாளராக சீதாலட்சுமி களம் காண்கிறார்.

2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு கவனம் பெற்றது. ஆனால், இதே தொகுதியில் முன்னர் நடந்த இடைத்தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் வெற்றி பெற்றதாகக் கூறி ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில் தவெக-வும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கு அக்கட்சியினர் மத்தியில் மாறுபட்ட விமர்சனங்கள் நிலவுகின்றன. சிலர் விஜய் ஏற்கெனவே அறிவித்ததுபோல் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் தவெகவுக்கு இலக்கு என வரவேற்கின்றனர். இன்னும் சிலர் தவெக போன்ற புதிய கட்சிக்கு இந்த இடைத்தேர்தல், தேர்தல் அரசியல் களத்தில் முன்னோட்டமாக இருக்கும். இதைப் புறக்கணித்திருக்காமல் தேர்தலில் பங்கேற்ற தொண்டர்கள் களப் பணியாற்ற வைத்து, பிரச்சாரக் களம் கண்டு அனுபவப் பாடம் பெற்றிருக்க வேண்டும் என்று ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.