இணையத்தைப் பயன்படுத்தும் இந்தியர் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டும்.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் இணையப் பயனாளர் எண்ணிக்கை 90 கோடியைத் (900 மில்லியன்) தாண்டும் என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்திய இணைய, கைப்பேசிச் சங்கமும் (IAMAI) சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டரும் இணைந்து ‘இந்தியாவில் இணையம் 2024’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு இணையத்தைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 88.6 கோடியாகப் பதிவானதாக அந்த அறிக்கை கூறியது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8 விழுக்காடு அதிகம். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 90 கோடியைத் தாண்டும் என்று அது கூறுகிறது.

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரில் 55 விழுக்காட்டினர் (48.8 கோடி) கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. 47% பேர் பெண்கள்.

சராசரியாக இந்தியர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையப் பயன்பாட்டில் கேரளா (72%), கோவா (71%), மகாராஷ்டிரா (70%) ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. பீகார் (43%), உத்தரப் பிரதேசம் (46%), ஜார்க்கண்ட் (50%) ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.