பலத்த காற்று, மழை: பல்லாயிரம் ஆஸ்திரேலிய மக்கள் இருட்டில் தவிப்பு
கடுமையான மழையும் பலத்த காற்றும் ஒன்றுசேர்ந்து தாக்கியதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி இருட்டில் தவித்தனர்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் இடைவிடாத மழை கொட்டியது. அதனால் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மாநிலத் தலைநகரும் ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய நகருமான சிட்னியில் மட்டும் ஏறத்தாழ 28,000 பேர் மின்தடையால் பாதிக்கப்பட்டனர்.
அருகில் உள்ள நியூகாசல் நகர் மற்றும் ஹண்டர் வட்டாரத்தைச் சேர்ந்த 15,000 மக்களுக்கும் அதேநிலை ஏற்பட்டதாக ‘ஆஸ்கிரிட்’ (Ausgrid) மின் உற்பத்தி நிறுவனம் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தது.
மின் விநியோகக் கம்பிகளில் மரம் விழுந்ததன் காரணமாக இந்த வாரத்தில் மட்டும் அந்த மாநிலத்தில் ஏறத்தாழ 200,000 மக்கள் இருட்டில் நடமாடும் நிலை ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல் ஒன்று தெரிவித்தது.
இதற்கிடையே, பெருமழை, பேய் காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அவசர உதவி நாடி, மாநில அவசரச் சேவை முகவை வியாழக்கிழமை (ஜனவரி 17) 2,825 அழைப்புகளைப் பெற்றது.
மழையும் காற்றும் சேர்ந்து தாக்கியதில் கீழே விழுந்த மரங்கள், சேதமடைந்த சொத்துகள் தொடர்பான அழைப்புகள் அவை என ஆஸ்கிரிட் இணையத்தளம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் நிலவரம் குறித்து ஆஸ்திரேலிய அவசரநிலை நிர்வாக அமைச்சர் ஜென்னி மெக்அல்லிஸ்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
“இக்கட்டான நிலை இன்னும் தொடருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் ஆக அண்மைய அவசரநிலை எச்சரிக்கையைக் கவனித்து அதற்கேற்ப செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்துக்கு பேரிடர் உதவி நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.