இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்திற்குத் திருவள்ளுவர் பெயர்: மோடி வரவேற்பு.
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருக்கும் கலாசார மையத்துக்குத் தமிழ்ப் புலவா் திருவள்ளுவரின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
தமிழின் பெருமையை உலகறிய செய்வதற்கான இந்த முயற்சியை வரவேற்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைசிறந்த புலவா் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதோடு, இருநாட்டு மக்கள் இடையிலான ஆழமான கலாசார, மொழி, வரலாறு, நாகரிகம் ஆகியவை தொடர்பான பிணைப்புக்கு சாட்சியாக இது அமைந்துள்ளதாக தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் தனது பதிவில் அவர் பகிர்ந்தார்.
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலாசார மையம், கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிகாரபூா்வமாக திறக்கப்பட்டது.
சுற்றுலா ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கலாசார மையத்துக்கு திருவள்ளுவரின் பெயா் சனிக்கிழமை (ஜனவரி 18) சூட்டப்பட்டது.
இலங்கைக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா, இலங்கை புத்தசாசனம், மதம், கலாசார அமைச்சா் சுனில் செனவி உள்ளிட்டோா் இந்தப் பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
12 மில்லியன் அமெரிக்க டாலா் செலவில் கட்டப்பட்ட இந்தக் கலாசார மையத்துக்கு பிரதமா் மோடி 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட இலங்கை பயணத்தின்போது அடிக்கல் நாட்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா் வைக்கப்படத்தற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ் மொழி, கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்தை திருவள்ளுவர் கலாசார மையம் என்று மறுபெயரிட்டிருப்பது பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளது.
மேலும், உலகம் முழுவதும் பழமையான மொழியான தமிழையும் அதன் கலாசாரத்தையும் பரப்புவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் முயற்சிகளில் இது மற்றொரு மைக்கல் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.