பறவைக் கூட்டத்தை விரட்டுவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,விமான நிலைய அதிகாரிகள் மூவர் காயம்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பறவைக் கூட்டத்தை விரட்டுவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,விமான நிலைய அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்.

ஓடுபாதைக்கு அருகில் வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டத்தை விரட்டுவதற்காக ஸ்கை ஸ்டிக்’ ரக வெடிமருந்துகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.இதன்போதே விமான நிலைய அதிகாரிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விலங்கு மற்றும் பறவை ஆபத்து கட்டுப்பாட்டு பிரிவின் மூன்று அதிகாரிகளே காயமடைந்துள்ளனர்.

இவர்கள் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று (20) பகல் 11.45 மணியளவில் விமான நிலைய ஓடுபாதைக்கு மேலே வானத்தில் பறவைகள் கூட்டம் பறந்து விமானங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் மற்றும் பறவைகள் அபாய கட்டுப்பாட்டு திணைக்களத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மூன்று அதிகாரிகள் வண்டியில் விமான ஓடுதளத்துக்குச் சென்று பறவைகள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

எனினும், அந்த துப்பாக்கிச் சூடு வெடிக்காமல் அதிகாரிகள் பயணித்த கெப், மீது வீழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தீயைக் கட்டுநாயக்க விமான நிலைய தீயணைப்பு பிரிவு வாகனங்களைப் பயன்படுத்தி அணைக்கப்பட்டது.இந்தச் சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்ததுடன் அவர்கள் பயணித்த வாகனமும் சேதமடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.