சத்தீஸ்கரில் 14 நக்சல்கள் சுட்டுக் கொலை!

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் – ஒடிஸா எல்லையில் காரியாபந்த் மாவட்டத்தில் காவல்துறையினர் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் சோதனை நடத்தினர். அப்போது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவலர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதில் மத்திய நக்சல்கள் குழு உறுப்பினரான ஜெயராம் உள்பட 14 -க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டதாக காரியாபந்த் காவல் கண்காணிப்பாளர் நிகில் ரஹேச்சா தெரிவித்துள்ளார்.

மேலும், கொல்லப்பட்ட நக்சல்கள் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரைஃபிள் போன்ற தானியங்கி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் சாவ் கூறியதாவது:

“அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் துணிச்சலுடன் செயல்பட்டு வருகின்றனர்.

காரியாபந்தில் நக்சல்களை கொன்ற வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நக்சல்வாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16 ஆம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தில் 12 நக்சல்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.