காதலனை விஷம் கொடுத்துக் கொன்ற, 24 வயது கேரள இளம்பெண் கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை.

ஈராண்டுகளுக்கு முன்னர் பழச்சாற்றில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்து தமது காதலனைக் கொலை செய்த இளம்பெண்ணுக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உள்ளது.

கேரளாவை மிகவும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அந்த வழக்கின் தீர்ப்பை நெய்யாற்றின்கரை அமர்வு நீதிமன்றம் வழங்கி உள்ளது.

கிரீஷ்மா என்னும் அந்த 24 வயதுப் பெண்ணுக்கு எதிரான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தண்டனையை பிறகு அறிவிப்பதாகக் கூறியது.

அதன்படி, திங்கட்கிழமை (ஜனவரி 20) அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஏ.எம். பஷீர் தீர்ப்பளித்தார்.

கேரளாவில் மரண தண்டனை விதிக்கப்படும் ஆக இளவயதுப் பெண் கிரீஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் இரண்டாவது பெண்ணும் அவர்தான்.

பூச்சிமருந்து வாங்கிக்கொடுத்த அவரது தாய்மாமா நிர்மல்குமாருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா, கடந்த 2021ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது இளநிலை 3ஆம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் பழகினார். அவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது.

ஆனால், கிரீஷ்மாவுக்கு ராணுவ அதிகாரி ஒருவரை மணமுடிக்க அவரது குடும்பம் முடிவுசெய்தது. அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதித்தார்.

திருமணத்திற்கு முன்னதாக காதலன் ஷரோன் ராஜின் தொடர்பைத் துண்டிக்க முடிவெடுத்த கிரீஷ்மா, அதற்குப் பல வழிகளில் முயன்றார்.

சக்திவாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளைக் கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையத்தளத்தில் தேடினார். ஒரு முறை பல மாத்திரைகளைக் குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால், அது பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில், 2022 அக்டோபர் 14ஆம் தேதி ஷரோன் ராஜை தமது வீட்டுக்கு அழைத்து வந்த கிரீஷ்மா, பூச்சிக்கொல்லி கலந்த பழச்சாற்றை அவருக்குக் கொடுத்தார். அதனைக் குடித்த ஷரோன் ராஜ், வீட்டுக்குச் சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்தார்.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாள்களில் உயிரிழந்தார். அதையடுத்து அவரது குடும்பம் கிரீஷ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கிரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.

“மிகத் துல்லியமாக திட்டமிட்டு இந்தக் கொலையை கிரீஷ்மா செய்துள்ளார். கொடூரமான ஒரு குற்றவாளியால் மட்டுமே இப்படிப்பட்ட கொலையைச் செய்ய முடியும். ஷாரோன் ராஜ் 11 நாள்கள் மருத்துவமனையில் பட்ட வேதனைகள் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உள்ளது. கிரீஷ்மா பிசாசின் சுபாவம் கொண்டவர். கருணை காட்டத் தகுதியற்ற அவருக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்கவேண்டும்,” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.