டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் ஜெய்சங்கர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

“இது அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம். இந்தியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதை வெளிப்படுத்துவதாக உள்ளது,” என அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஜெய்சங்கருடன் ஈக்வடார் நாட்டு அதிபரும் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். ஜப்பான், ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்கள் இரு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்தனர்.

இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஜெய்சங்கர், அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது பெரும் கௌரவமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபருக்கு இந்திய பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை அமைச்சர் ஜெய்சங்கர் கொண்டு சென்றதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

“47வது அதிபராக நீங்கள் பதவி ஏற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு என் வாழ்த்துகள்.

“இரு நாடுகளின் நலனுக்காவும் உலகின் சிறப்பான எதிர்காலத்தை வடிவமைக்கவும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.