துப்பாக்கிச் சூடுகளைத் தடுக்கும் நோக்கில், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படை.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடுகளைத் தடுக்கும் நோக்கில், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கொழும்பு நகரில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே 7 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பதிவாகியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் வெலிகம, அத்திடிய, படோவிட்ட, கல்கிஸ்ஸ, கொஹுவல மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடுகளை தடுப்பதற்கு உதவி தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையின் சிறிய குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இருப்பினும், பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையினரை அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அவசர வீதித் தடைகளை நிறுவுவதன் மூலம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை நிறுத்துவதோடு, நடமாடும் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.