மகாராஷ்டிரத்தில் ரயில் மோதியதில் 6 பயணிகள் பலி!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், ரயிலில் தீப்பற்றியதாகப் புரளி பரவியதால் அச்சத்தில் ரயிலிலிருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியதில் 6 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜல்கான் மாவட்டத்தில், தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயில் பயணிகள் நிறுத்தியதாகவும், ரயில் நின்றபோது, அதிலிருந்து இறங்கி அருகில் இருந்த தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது அவ்வழியாக வந்த மற்றொரு ரயில் மோதியதில் இந்த சம்பவம் நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
புஷ்பக் ரயிலில், திடீரென புகை வந்ததால், ரயிலில் தீப்பற்றியதாக அஞ்சிய ரயில் பயணிகள், சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்தி அதிலிருந்து தண்டவாளத்தில் குதித்துள்ளனர்.
சிலர், அருகில் இருந்த தண்டவாளம் வழியாக ஓடியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக, பயணிகள் இருந்த அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்துகொண்டிருந்த மற்றொரு ரயில் மோதி, ரயில் பயணிகள் சிலர் பலியாகியுள்ளனர்.
பலி எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 10க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.