அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள 18,000 இந்தியக் குடிமகன்களின் நிலை?
அமெரிக்காவில் 18,000 இந்திய நாட்டவர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கண்டறிந்து உள்ளன.
அவர்களை சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்புவது தொடர்பாக அவ்விரு நாடுகளும் கலந்து பேசி உள்ளன.
டிரம்ப் பதவி ஏற்பு நிகழ்வுக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மார்க்கோ ரூபியோ இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
‘ஒழுங்குமீறிய குடிநுழைவு’ என்பது தொடர்பான அந்த ஆலோசனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியது.
சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றவும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் இந்தியக் குடிமகன்களை அடையாளம் கண்டு இந்தியாவுக்கு அவர்களைத் திருப்பி அனுப்பவும் இந்திய அரசாங்கம் தயாராக உள்ளது என்று புளூம்பெர்க் ஊடகம் செவ்வாய்க்கிழமை கூறியது.
அத்துடன், தற்போதைய நிலவரப்படி சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் 18,000 இந்தியர்களை இரு நாடுகளும் இணைந்து அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடும் என்றும் அந்தச் செய்தி தெரிவித்தது.