காசாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் .

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் இஸ்ரேலின் மேற்குக்கரை தாக்குதல்களில் 10 பலஸ்தீனர் பலி
-காசாவில் முழு கட்டுப்பாட்டையும் உறுதி செய்தது ஹமாஸ்
காசாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேலின் பாரிய படை நடவடிக்கை ஒன்றில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டு 35க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த படை நடவடிக்கையில் வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதோடு ஆளில்லா விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் கவச வாகன புல்டோசர்களின் உதவியோடு பெரும் எண்ணிக்கையான இஸ்ரேலிய துருப்புகள் நகருக்குள் நுழைந்ததாக பலஸ்தீன ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீன போராளிகளின் கோட்டையாக கருதப்படும் ஜெனினில் ‘பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக ‘நீடித்த மற்றும் குறிப்பிடத்தக்க’ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். காசாவில் மூன்று நாட்களுக்கு முன் போர் நிறுத்தம் எட்டப்பட்ட நிலையில் மேற்குக் கரையில் வன்முறை அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய குடியேறிகளும் அங்கு பலஸ்தீன குடியிருப்பாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
முகாம் மீது படையெடுப்பு ஒன்று இடம்பெறுவதாக ஜெனின் ஆளுநர் கமால் அல் ரூப் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘அபசே (ஹெலிகள்) வானில் வட்டமிட இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் அனைத்து இடங்களிலும் தென்பட்ட நிலையில் இது விரைவாக இடம்பெற்றது’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கவச வாகன புல்டோசர்கள் பல வீதிகளிலும் குழிகளைத் தோண்டி ஜெனின் முகாமை இஸ்ரேலிய படை முழுமையாக முற்றுகை செய்ததாக உள்ளூர் தரப்புகளை மேற்கோள்காட்டி பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. இஸ்ரேலிய படையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று மருத்துவர்கள் மற்றும் இரு தாதியர்கள் காயமடைந்ததாக ஜெனின் அரச வைத்தியசாலையின் பணிப்பாளர் விசாம் பாகிரை மேற்கோள்காட்டி அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இஸ்ரேலியப் படை முன்னேறுவதற்கு முன்னர் பலஸ்தீன பாதுகாப்பு தரப்பினர் பலஸ்தீன அகமதி முகாமைச் சூழ தமது நிலைகளில் இருந்து வாபஸ் பெற்றுள்ளனர். ‘பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மீது இஸ்ரேலியப் படை சூடு நடத்தியதால் பலரும் காயமடைந்தனர்’ என்று பலஸ்தீன பாதுகாப்பு படையின் பேச்சாளர் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் அன்வர் ரஜப் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஜெனினில் இஸ்ரேலிய படையினால் முஸ்தபா அபூ திபைக் என்ற 16 வயது சிறுவன் மற்றும் எட்டு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும் சுமார் 8 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் டியானிக் என்ற கிராமத்தில் இஸ்ரேலிய படை வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளது.
ஜெனின் அகதி முகாம் இஸ்ரேலிய படையினரால் அடிக்கடி இலக்காகி வருவதோடு கடந்த வாரம் இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகளின் பாதுகாப்புடன் இஸ்ரேலிய குடியேறிகள் வாகனங்கள் மற்றும் சொத்துகளுக்கு தீ வைத்து நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 21 பலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
கடந்த 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்துள்ளது. காசா போர் தொடக்கம் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேறிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 847 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதே காலப்பகுதியில் பலஸ்தீன தாக்குதல்கள் அல்லது இஸ்ரேலிய சுற்றிவளைப்புகளின்போது குறைந்தது 29 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய தரப்பு குறிப்பிட்டுள்ளது.மறுபுறம் 15 மாதங்கள் நீடித்த போருக்கு பின்னர் காசாவில் அமைதி திரும்பி இருக்கும் சூழலில் ஹமாஸ் அமைப்பு அங்கு முழு கட்டுப்பாட்டையும் பெற்றுள்ளது.
அங்கு இடிபாடுகளை அகற்றும் பணிகள் ஹமாஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெற்று வருவதோடு, காசாவின் தூசி நிறைந்த வீதிகளில் உதவி வாகனங்களுக்கு ஆயுதம் ஏந்திய ஹமாஸ் போராளிகள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நீல நிற சீருடை அணிந்த ஹமாஸ் பொலிஸார் வீதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைவிடாது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தியதாக கூறுகின்றபோதும் அந்த அமைப்பு காசாவில் தனது பலத்தை தொடர்ந்து தக்கவைத்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அந்த அமைப்பு காசாவின் பாதுகாப்பை மாத்திரம் கட்டுப்பாடுத்தாது அமைச்சு மற்றும் அரச நிறுவனங்களை நடத்திச் செல்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘எந்த வகையான பாதுகாப்பு இடைவெளியையும் தவிர்க்க வேண்டி உள்ளது’ என்று காசாவின் ஹமாஸ் அரச ஊடக அலுவலகத்தின் பணிப்பாளர் இஸ்மைல் அல் தவப்தா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். உதவி வாகனங்களுக்கு சுமார் 700 பொலிஸார் பாதுகாப்பு அளிப்பதாகவும் ஞாயிறு தொடக்கம் எந்த ஓர் உதவி வாகனமும் கொள்ளையடிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய வாரங்களில் காசாவில் உள்ள கீழ் மட்ட நிர்வாகங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியிருந்தது. ஹமாஸின் ஆட்சி நிர்வாகத்தை முறியடிக்கும் முயற்சியாகவே இந்தத் தாக்குதல்களை நடத்தி இருந்தது. இஸ்ரேல் ஏற்கனவே ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மையில் ஹனியே, மற்றும் அந்த அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வார் மற்றும் ஆயுதப் பிரிவு தலைவர் முஹமது தெயிப் உட்பட பல தலைவர்களையும் படுகொலை செய்தது.
இத்தனை இழப்புகளுக்கு பின்னரும் ஹமாஸின் நிர்வாகக் கட்டமைப்பு தொடர்ந்து இயங்கி வருவதாக அல் தவப்தா குறிப்பிட்டார். ‘தற்போது எம்மிடம் பொது மக்களுக்கு சேவை வழங்குவதற்கு தினசரி பணியாற்றும் 18,000 ஊழியர்கள் உள்ளனர்’ என்றும் அவர் கூறினார்.
ஹமாஸ் நிர்வாகத்தின் கீழான மாநகர சபை, வாகனங்கள் செல்வதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் வீதிகளை சுத்தப்படுத்தி வருவதோடு குழாய்கள் மற்றும் உட்கட்டமைப்ப வசதிகளிலும் திருத்தங்கள் செய்து வருகிறது.
போருக்கு பின்னரான காசாவில் ஹமாஸ் ஆட்சியில் இருக்கக் கூடாது என்று இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் 15 மாதங்கள் நீடித்த போரில் 47,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருக்கும் சடலங்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை நூற்றுக்கும் அதிகமான சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.