கோமியத்தில் உள்ள சேர்மங்கள் மற்றும் புரதம் பலருக்கு ஒவ்வாமையை உருவாக்கும் – தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

கோமியத்தில் உள்ள சேர்மங்கள் மற்றும் புரதம் பலருக்கு ஒவ்வாமையை உருவாக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

பொங்கல் விழாவையொட்டி சென்னையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, “கோமியம் மருத்துவக் குணங்கள் கொண்டது. அதனைக் குடித்தால் நோய்கள் குணமடையும். உடலுக்கு நன்மை ஏற்படும்” என்று பேசினார்.

இது பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

ஐஐடி இயக்குநர் காமகோடியின் கருத்துகள் ஆதாரப்பூர்வமற்றது. மூடநம்பிக்கை சார்ந்தது. சாதாரண ஏழை எளிய மக்களிடையே பரப்பும் ஆபத்தான பரிந்துரையும்கூட.

கோமியம் ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரை செய்யப்பட்டாலும் பயன்படுத்தப்பட்டாலும் அது நோய்களை குணமாக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான எந்தவிதமான நிரூபணமும் இல்லை.

உலக சுகாதார நிறுவனம் அல்லது எந்தவொரு உலகளாவிய சுகாதார அமைப்பும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, கோமியம் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். கோமியத்தில் உள்ள ஈ. கோலை, சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் ஆகிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

இவை சிறுநீர்பாதைத் தொற்றுக்கள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். கோமியத்தில் உள்ள சேர்மங்கள் மற்றும் புரதம் பலருக்கு ஒவ்வாமையை உருவாக்கும். அதுவும் நோய்வாய்ப்பட்ட பசுக்களின் கோமியம் அதிகம் பாதிப்புகளை உருவாக்கும்.

தற்போதைய இந்திய அரசு உருவாக்கியிருக்கும் ஆயுஷ் என்ற அமைச்சகம் இதுபோன்ற குழப்பங்களுக்கு வித்திடுகிறதேதவிர, இந்த அரசின் கால்நடை மருத்துவத்துறை இதனை மருந்து என்றோ மருத்துவக் குணங்கள் உள்ளதென்றோ இதுவரை பரிந்துரை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிவியலை ஆதாரமாகக் கொண்டு துல்லியமான விளைவுகளை மையமாகக்கொண்டு தொழில்நுட்பங்கள் உருவாகிறது.

அத்தகைய உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அவரது தனிப்பட்ட நம்பிக்கைச்சார்ந்த அல்லது தற்போதைய அரசியல் சூழலில் அவருக்கு சுயநலன் சார்ந்த காரணங்களுக்காகவும் மற்றும் அடிப்படைவாதக் கருத்துகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் அறிவியல் அடிப்படையில்லாத ஆபத்து நிறைந்த கருத்துகளைப் பரப்புவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.