உக்ரேனியப் போரை நிறுத்தாவிட்டால் தடைகள் விதிக்கப்படும்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரேன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால் ரஷ்யாவிற்கு அதிக வரிகளும் கூடுதல் தடைகளும் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தளத்தில் திரு டிரம்ப் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானிப்பதற்கு உந்துவதன் மூலம் ரஷ்யாவிற்கும் அதன் அதிபருக்கும் தாம் பேருதவி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா இதற்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும் மாஸ்கோ, புதிய அமெரிக்க அதிபரின் நிர்வாகத்துடன் பேச்சு நடத்த சிறிய அளவிலான வாய்ப்பு இருப்பதாக மூத்த அதிகாரிகள் அண்மையில் கூறினர்.

பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறிவரும் திரு புட்டின், ரஷ்யாவின் எல்லைகளை உக்ரேன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அத்துடன் உக்ரேன் நேட்டோ கூட்டணியில் சேர்வதை அனுமதிக்க மறுக்கிறார்.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு டிரம்ப், ரஷ்ய அதிபருடன் தாம் விரைவில் பேசவிருப்பதாகவும் திரு புட்டின் பேச்சு நடத்த வராவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கப்போவதாகவும் கூறினார்.

புதன்கிழமை வெளியிட்ட ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தளப் பதிவில், தாம் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இந்தப் போரே தொடங்கியிருக்காது என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.

இவ்வேளையில், போரை முடிவுகுக் கொண்டுவர அமெரிக்க அதிபர் தரும் நெருக்குதலால் ரஷ்யப் பொருளியல் குறித்துத் திரு புட்டின் கவலை அடைந்திருப்பதாகத் தகவலறிந்தோர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

ரஷ்யப் பொருளியல், எண்ணெய், எரிவாயு, தாதுப்பொருள்கள் ஏற்பத்தியைப் பெரிதும் சார்ந்துள்ளது. உக்ரேன் மீது அது 2022ல் படையெடுத்ததை அடுத்து மேலை நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தபோதும் கடந்த ஈராண்டுகளில் அதன் பொருளியல் வலுவான வளர்ச்சி கண்டது.

இருப்பினும் உள்நாட்டில் ஊழியர் பற்றாக்குறை, பணவீக்கத்தைச் சமாளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட அதிகமான வட்டி விகிதம் போன்றவற்றால் சிக்கல்கள் எழுந்தன. மிக அதிகமான ராணுவச் செலவால் நிலைமை மேலும் மோசமானது.

இதனால் உக்ரேனியப் போருக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதை, ரஷ்யாவில் முடிவெடுக்கும் பொறுப்பிலுள்ள உயர்நிலைக் குழுவினர் சிலர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.