மின்சார வாகன விநியோகச் சங்கிலிகள்; அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் : சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வெளியான தகவல்!
பசுமை எரிசக்திக்கு மாறும் போக்கு தொடர்கிறது, அதில் வளர்ச்சி காணப்படுகிறது.
அதேவேளை, அதன் தொடர்பில் சில சிக்கல்களும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக எரிசக்தி முறையை முழுமையாக மாற்றியமைக்க டிரில்லியன் டாலர் கணக்கில் தேவைப்படும் என்பது ஒரு சவால். மேலும், மிகப் பெரிய அளவில் லித்தியம், நிக்கல், செம்பு போன்ற முக்கியமான கனிமப் பொருள்கள் தேவைப்படும்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் இவ்வாண்டுக்கான உலகப் பொருளியல் மாநாட்டில் இத்தகவல்கள் பங்கேற்பாளர்களிடம் தெரியப்படுத்தப்பட்டன.
இரண்டு டிரில்லியன் டாலர் (2.72 டிரில்லியன் வெள்ளி) பசுமை தொழில்நுட்பத் துறையில் சீனாவின் ஆதிக்கம் ஒரு நற்செய்தியாகப் பார்க்கப்படுவதாக நம்பப்படுகிறது. நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட எரிசக்திக்கான செலவு குறைந்திருப்பது அதற்குக் காரணம்.
எனினும், சீனாவில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு வரி விதிக்கப்படுவதால் வர்த்தகம் தொடர்பில் அச்சம் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு உலகளவில் விற்கப்பட்ட 17.2 மில்லியன் மின்சார வாகனங்களில் மூன்றில் இரு பங்கு சீனாவில் உற்பத்தியானவை என்று புளூம்பர்க்என்இஎஃப் (BloombergNEF) ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. சீன மின்சார வாகன நிறுவனங்கள், தாங்கள் செயல்படும் சந்தைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. குறிப்பாக ‘பிவைடி’க்கு இது பொருந்தும்.
அதனால் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கார் நிறுவனங்களிடையே அச்சம் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
மின்சார வாகனச் சந்தையில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்தி வருவது குறித்த கவலைகளைப் பற்றி புதன்கிழமையன்று (ஜனவரி 21) நடந்த கலந்துரையாடலில் பேசப்பட்டது. ஒரு நாடு அளவுக்கதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறதா என்பது குறித்து கவலைகள் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.
சீனாவின் கன்டெம்பரரி ஏம்பரெக்ஸ் டெக்னாலஜி (Contemporary Amperex Technology) நிறுவனம்தான் உலகின் ஆகப் பெரிய மின்கலன் உற்பத்தி நிறுவனமாகும். அது, டெஸ்லா, பிஎம்டபிள்யு போன்ற பிரபல கார் நிறுவனங்களுக்கும் மின்கலன்களைச் செய்து தருகிறது.
இந்நிலையில், மாற்று ஏற்பாடாக விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் முயற்சியில் அதிக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.