மனைவியுடன் எடுத்த படத்தால், அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் தலைவர்!

.சத்தீஷ்கர் மற்றும் ஒடிசா எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 20 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் நக்சலைட் அமைப்பில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயராம் ரெட்டி என்பவரும் அடங்குவார்.

சலபதி என்று அனைவராலும் அறியப்படும் ஜெயராம் ரெட்டி 2008ஆம் ஆண்டு ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருந்தார்.

ஒடிசாவின் நயகர் போலிஸ் ஆயுதக்கிடங்கில் நக்சலைட்கள் கொள்ளையடித்ததிலும் ஜெயராம் முக்கிய பங்கு வகித்தார்.

நயகர் நகரில் தாக்குதல் நடத்தும்போது அந்த நகருக்கு வரக்கூடிய அனைத்து சாலைகளிலும் மரங்களை வெட்டிப்போட்டு காவலர்களை உள்ளே வர விடாமல் தடுக்கும் செயலில் ஈடுபட்டார்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு ஜெயராம் தொடர்ந்து சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

அதோடு ஜெயராம் தொடர்பாக எந்த புகைப்படமும் யாரிடமும் சிக்காமல் இருந்தது. இதனால் அவரை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் இருந்து வந்தது.

ஆந்திராவில் 2016ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினர் நக்சலைட்களுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நக்சலைட்கள் ஒரு கைத்தொலைபேசியை விட்டுச்சென்றனர். அதில் ஆய்வு செய்தபோது ஜெயராம் தனது மனைவி அருணாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்று இருந்தது.

அந்த புகைப்படம் கிடைத்த பிறகுதான் ஜெயராம் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப்பற்றிய தகவல் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பாதுகாப்பு படையினர் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்தே ஜெயராம் பாதுகாப்பு மிக்க பகுதிக்குள் சென்றார். எந்நேரமும் ஜெயராமிற்கு 10 பேர் பாதுகாப்பு கொடுத்து வந்தனர்.

சத்தீஷ்கர் மாநிலம், பாஸ்தர் பகுதியில் முகாமிட்டு இருந்த ஜெயராம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா எல்லைக்கு சென்றார்.

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம் கொரில்லா போர் யுக்தியில் மிகவும் திறமைசாலி. ஆனால் ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெயராம் உயிரிழந்தார்.

ஜெயராம் புகைப்படம் கிடைத்த பிறகுதான் அவரை இலக்கு வைத்து பாதுகாப்பு படையினர் தாக்கத் தொடங்கினர். ஜெயராம் இழப்பு நக்சலைட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் மட்டும் 40 நக்சலைட்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.