குடிபோதையில் தூங்கிய போலீஸ் சார்ஜென்ட் பணிநீக்கம் , இன்னொருவருக்கு இடமாற்றம்.

சமூக ஊடகங்களில் பரவி வந்த ஒரு செய்தியில், பாணந்துறை வடக்கு காவல்துறை அதிகாரிகள் சிலர் தங்கள் பணி நேரத்தில் சமையலறையில் குடிபோதையில் தூங்குவதாகக் குற்றம் சாற்றப்பட்டிருந்தமைக்கு , மற்றொரு காணொளியில் காவல்துறை பதிலளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அதன்படி, பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணியில் இருந்தபோது குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மற்றொருவர் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வீடியோவின்படி, போலீஸ் ஜீப்பில் வரும் போலீஸ் அதிகாரிகள் குழு, குடிபோதையில் சீருடையில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரியை தூக்கிச் செல்வது தெரிந்தது. விசாரணையில் அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரிய வந்துள்ளது.

காவல்துறை சீருடையை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் நடந்து கொண்டதற்கு பதில் காவல்துறைத் தலைவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், போதைப்பொருளுக்கு மிகவும் அடிமையான காவல்துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, மற்ற அதிகாரி வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.