சீனா மீது வரியைத் தவிர்ப்பதே தமது தேர்வு – டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளியல் போட்டியாளரை கூடுதலான இறக்குமதி வரிகளுடன் தாக்குவது குறித்து தமது தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் உறுதிமொழிகளைக் கூறிய, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது வரியைத் தவிர்ப்பதே தமது தேர்வு என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வியாழக்கிழமை (ஜனவரி 23) ஒளிபரப்பான ஃபோக்ஸ் செய்தி நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். சீனா மீது வரி விதிப்பை பயன்படுத்துவதை தான் விரும்பவில்லை என்றும், ஆனால் வரிகளை “மிகப்பெரிய சக்தி” என்று டிரம்ப் கூறினார்.

“ஆனால் சீனா மீது அமெரிக்காவுக்கு உள்ள பெரிய கட்டுப்பாடு, வரி. அவர்கள் அவற்றை விரும்பவில்லை, நான் அதைப் பயன்படுத்த வேண்டியதில்லை, ஆனால் அது சீனா மீது மிகப்பெரிய கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது,” என்றார் அவர்.

கடந்த வாரம் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் நடத்திய உரையாடல் குறித்துக் குறிப்பிட்ட அவர், “நல்ல, நட்பான உரையாடலாக இருந்தது,” என்றார். சீனாவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்ட முடியும் என்று தாம் நினைத்ததாகவும் கூறினார். டிரம்ப் திங்களன்று பதவியேற்பதற்கு முன்னதாக, தொலைபேசி அழைப்பில் டிக்டாக், வர்த்தகம், தைவான் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உலகின் இரு பெரிய பொருளியல்களின் தலைவர்களும் விவாதித்தனர்.

திங்களன்று பதவியேற்றதும், அனைத்து சீன இறக்குமதிகளுக்கும் பிப்ரவரி 1 முதல் 10 விழுக்காடு வரி விதிப்பு தொடங்கக்கூடும் என்றார் டிரம்ப். எனினும், தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்தபடி உடனடியாக அவர் வரி விதிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பு குறித்தும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவும் சீனாவும் வேறுபாடுகளை “பேச்சுவார்த்தை, ஆலோசனை” மூலம் தீர்க்க வேண்டும் என்று பெய்ஜிங் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அழைப்பு விடுத்தது. “சீனா – அமெரிக்கா பொருளியல், வர்த்தக ஒத்துழைப்பு பரஸ்பரம் நன்மை பயக்கும்,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் கூறினார்.

“வர்த்தகப் போர்கள், வரிவிதிப்புப் போர்களில் எவருக்கும் வெற்றி கிடைப்பதில்லை; யாருடைய நன்மைக்கோ, உலக நன்மைக்கோ பயனளிப்பதில்லை,” என்றார் அவர்.

அமெரிக்காவும் சீனாவும் அரசதந்திர, பொருளியல் கருத்து வேறுபாடுகளில் சிக்கியுள்ளன. , இதை தொழில்நுட்பம் ராணுவ போட்டித்தன்மை, கசப்பான சர்ச்சைகள், வாஷிங்டனின் பிரபலமான சமூக ஊடகச் செயலி டிக்டாக்கின் உரிமை குறித்த கவலைகள் போன்றவை அதை மேலும் மோசமாக்குகின்றன.

Leave A Reply

Your email address will not be published.