அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவால் பிள்ளைபெற அவசரம் காட்டும் இந்தியத் தம்பதியர்.

அதிபர் டோனல்ட் டிரம்ப் பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவு அமெரிக்காவில் உள்ள இந்தியத் தம்பதியினரிடையே வேகமாகக் குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டுத் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தை தாமாக அமெரிக்கக் குடியுரிமை பெறும் விதியை திரு டிரம்ப் ரத்து செய்து உள்ளார். அந்த உத்தரவு இறுதி செய்யப்பட்டால், பிப்ரவரி 20ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுத் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகள் பிறப்புரிமையை இழக்கும்.

மாணவர் விசா, சுற்றுப்பயண விசா போன்ற தற்காலிக அனுமதியில் அமெரிக்காவில் தங்கி இருப்போர் அமெரிக்காவில் பெற்றெடுக்கும் குழந்தை அமெரிக்கக் குடியுரிமை பெறுவது அந்தக் கெடுவுக்குப் பின்னர் தடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதனால், தற்போது அமெரிக்காவில் கர்ப்பிணியாக உள்ள இந்தியப் பெண்கள் புதிய உத்தரவு நடப்புக்கு வருவதற்குள் அறுவைச் சிகிச்சை மூலம் பிள்ளை பெற்றுக்கொள்ள மருத்துவர்களை நாடி வருவதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களது பிள்ளை அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது என்ற ஆசையில், பிப்ரவரி 20க்குள் பிள்ளைபெற இந்தியப் பெண்களில் சிலர் அவசரம் காட்டுவதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூஜெர்சியில் பிரசவ மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் எஸ்.டி. ரமா கூறுகையில், “பிரசவ தேதிக்கு முன்னரே குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான கோரிக்கைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளன,” என்றார்.

“குறிப்பாக, ஏழு மாதக் கர்ப்பிணி ஒருவர் தமது கணவருடன் வந்து, ‘சிசேரியன்’ அறுவைச் சிகிச்சை மூலம் சீக்கிரம் குழந்தை பெறவேண்டும் என்று கேட்டார். ஆனால், மார்ச் மாதத்திற்கு முன்னர் அவர் பிள்ளைபெற வாய்ப்பில்லை,” என்று மருத்துவர் ரமா கூறியதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்துள்ளது.

டெக்சஸில் உள்ள மற்றொரு பேறுகால மருத்துவரான டாக்டர் எஸ்.ஜி. முக்காலா, “அறுவை சிகிக்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இரண்டு நாள்களில் இருபது தம்பதியினர் விசாரித்துள்ளனர். அவர்களின் அவசரம் எனக்குப் புரிகிறது. அனால், குறித்த காலத்திற்கு முன்னரே செயற்கையாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது ஆபத்து,” என்றார்.

அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவு அமெரிக்காவில் உள்ள ஏராளமான வெளிநாட்டுக் குடும்பங்களிடையே நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தற்காலிக வேலை விசாவில் இருப்போரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.