மஸ்க்கின் குறைகூறலை நிராகரித்த டிரம்ப்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தாம் அறிவித்த செயற்கை நுண்ணறிவுத் (AI) திட்டம் தொடர்பான இலோன் மஸ்க்கின் குறைகூறலை ஜனவரி 23ஆம் தேதி நிராகரித்துள்ளார்.
ஏறக்குறைய 500 பில்லியன் அமெரிக்க டாலர் (S$674 பில்லியன்) மதிப்பிலான அந்தத் திட்டத்தை இவ்வாரத் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் அவர் அறிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21), ‘ஓப்பன்ஏஐ’, ‘சாஃப்ட்பேங்க்’, ‘ஆரக்கிள்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ஸ்டார்கேட்’ எனும் கூட்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளதாகத் திரு டிரம்ப் அறிவித்தார்.
அந்தக் கூட்டு நிறுவனம் தரவுச் சேமிப்பு நிலையங்களையும் அமெரிக்காவில் 100,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார் அவர்.
மறுநாள் திரு மஸ்க் தமது எக்ஸ் தளப் பதிவில், ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம் அத்திட்டத்துக்கான நிதிக்குப் பங்களிக்க இயலுமா என்று ஐயம் தெரிவித்திருந்தார்.
இது அதிபரைப் பாதித்ததா என்று செய்தியாளர்கள் திரு டிரம்ப்பிடம் ஜனவரி 23ஆம் தேதி கேட்டனர்.
“இல்லை. அந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய ஒருவரை அவர் வெறுக்கிறார்,” என்றார் திரு டிரம்ப்.
அந்த நிறுவனத்திடம் பணம் போதிய அளவில் இல்லை என்று கூறப்பட்டது பற்றிக் கேட்டபோது, “அவர்களிடம் இருக்கிறதா என்று தெரியாது. இருப்பினும் அவர்கள் பங்களிக்கின்றனர். அரசாங்கம் நிதி ஏதும் வழங்கவில்லை. அவர்கள் பணக்காரர்கள் என்பதால் அவர்களால் நிதி ஒதுக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்றார் திரு டிரம்ப்.
இந்தச் சம்பவம் அதிபருக்கும் திரு மஸ்க்குக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்று அதிபரின் ஆலோசகராகப் பணியாற்றும் ஒருவர் கவலை தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.