‘ஏஐ’ தொழில்நுட்ப மையமாக மாறுகிறதா தமிழ்நாடு – ஓர் அலசல்.

உலகின் இன்றைய அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.

அத்தியாவசியப் பணிகள் தொடங்கி பல அநாயசப் பணிகளையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்து முடிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் இதுதொடர்பான ஆராய்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இச்சூழலில், குவிந்து வரும் முதலீடுகள் காரணமாக, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மையமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது என்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள். இது உண்மைதானா?

இக்கேள்விக்கான விடையாக தமிழக அரசு தெரிவித்த, ஊடகங்களில் வெளியான பல்வேறு தகவல்களைப் பார்ப்போம்.

முதலீடுகளுடன் களமிறங்கும் அனைத்துலக நிறுவனங்கள்

கூகல், பேபால், அப்ளைட் மெட்டீரியல்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் கணிசமான முதலீடுகள், திட்டங்களை ஈர்க்கும் வகையில், இந்தியாவில் ஏஐ முன்முயற்சிகளுக்கான மையப் புள்ளியாக தமிழ்நாடு உருவெடுத்து வருவதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.

“மின் வாகன உற்பத்தி தொடங்கி, புதிய தொழில்நுட்ப முன்னெடுப்புகளில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்று அண்மையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டைத் துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கோவையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) தொடர்பான தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள சிறிய நகரங்களிலும் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன என்றும் வளர்ச்சி ஒரே இடத்தில் மட்டுமே ஏற்படாமல், அனைத்து இடங்களிலும் சமமாகப் பரவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் மூலம் 2,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்க்கு வழிகாட்டி இருக்கிறோம்.

தமிழ்நாடு, புத்தாக்கம் – தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக உள்ளது. ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும்,” என்றார் மு.க.ஸ்டாலின்.

வளர்ச்சிக்கான முக்கியக் காரணிகள்

தமிழ்நாட்டில் கூகல் மாநிலத்தின் ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பிற்கு கணிசமான அர்ப்பணிப்பைச் செய்கிறது.

தமிழகத்தில் கூகல் நிறுவனம், தனது ஏஐ ஆய்வகங்களை நிறுவுவதன் மூலம் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 20 லட்சம் இளைஞர்களை ஏஐ தொழில்நுட்பத்தில் திறன் பெற்றவர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளூர் தொடக்க நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் புறநகர் ரயில், பேருந்துகள், டாக்சி சேவைகளை ஒருங்கிணைக்கும் ஏஐ இயக்கப்பட்ட தளத்தை உருவாக்குவதன் மூலம் சென்னையின் போக்குவரத்து அமைப்பில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

தமிழக அரசின் கொள்கை, துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழகத்தில் ஏஐ முதலீடுகள் மற்றும் திட்டங்கள் ஆகியவையே ஏஐ மையமாக, தமிழ்நாடு உருப்பெற முக்கிய காரணிகளாக நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர். இவர்களில் 17% பொறியாளர்கள் தமிழகத்தில் உருவாகிறார்கள். இந்த மனித ஆற்றலும் தமிழகத்துக்குப் பேரளவில் கைகொடுக்கிறது.

இலக்கை அடைய நிறைய முதலீடுகள் தேவை

செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும். தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தமிழ்மொழி, தகவமைக்கப்பட வேண்டும்.

இதற்கிடையே, கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை அடுத்து, துபாய் உள்ளிட்ட உலகின் முக்கியமான நகரங்கள், நாடுகளில் உள்ளது போல கோவையிலும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் (மாடல்கள்) உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழக தவவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.

செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கை அடைய நிறைய முதலீடுகள் தேவை என்றும் இதைச் சாத்தியமாக்கவே தாம் அவ்வப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யானைகள் ரயில் மோதி இறப்பதைத் தடுக்க உதவும் ஏஐ

ஏஐ தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தற்போது, தமிழ்நாடு வனத்துறை கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் செயற்கை நுண்ணறிவுக் கட்டுப்பாடு அறையை அமைத்து, ரயில் தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, ரயில்களில் மோதி 36 யானைகள் மரணித்துள்ளன.

மனிதனை மையப்படுத்தும் ஐஐடியின் புதிய திட்டம்

சென்னை ஐஐடியின் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

இத்திட்டமானது, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும் என்கிறார் ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி.

மேலும், இந்திய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், இந்திய ராணுவம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் திட்டப்பணிகளுக்கு பாதுகாப்பு தரும் அம்சமாக இந்த மையம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதுடன், இதற்காக ரூ.13.93 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் புது முயற்சிகளை ஊக்குவித்தல், ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி, திறன் கட்டமைப்பை உருவாக்குதல், ஏஐ துறையில் பங்குதாரர்கள், கூட்டாண்மை ஆகியவற்றை உருவாக்கி சிறந்த செயல்பாடு, அறிவு மற்றும் வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை ஊக்குவிக்கப்படும்.

நிர்வாகத்தில் சிக்கல் நிறைந்த இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை தீர்த்தல் என இந்த இயக்கமானது பல்வேறு பணிகளைக் கவனிக்க உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் நடுவமாகத் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அடுத்த கல்வி ஆண்டில் தமிழகப் பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான குழு அமைக்கப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அண்மையில் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப வகுப்புகள் நடத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.