காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணம்: வெளியான அதிர்ச்சி காரணம்!
ரஜவுரியில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நச்சுப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற மலை கிராமத்தில், கடந்த ஒன்றரை மாதங்களில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களில் 13 பேர் 3 முதல் 15 வயது கொண்ட சிறார்கள்.
இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் மூலம் அவர்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கக் கூடிய விஷம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்தக் கிராமத்தில் உள்ள நீருற்றின் தண்ணீரில் பூச்சிக்கொல்லி கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அந்த நீருற்றுக்கு அண்மையில் சீல் வைக்கப்பட்டது
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய அறிவியல்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: ரஜவுரியில் 17 பேர் இறந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையின் முடிவில் அவர்கள் நோய்த்தொற்று, வைரஸ் அல்லது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க வில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் நச்சுப் பொருட்களால் ஏற்பட்டவை என்று தெரிகிறது.
இது எந்தவகையான நச்சுப் பொருட்கள் என்பதை அடையாளம் காண சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதை வேண்டுமென்றே யாராவது செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்படி யாராவது செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியரும், தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் தலைவருமான டாக்டர் சுதிர் குப்தா கூறும்போது, “இந்த உயிரிழப்புகளுக்கு என்ன வகையான நச்சுப்பொருள் காரணம் என்பதை அடையாளம் காண விரிவான பரிசோதனை தேவைப்படுகிறது. இதற்கு சில பூச்சிக்கொல்லி அல்லது நச்சு வாயுக்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம்” என்றார்.